பிரதம நீதியரசர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கோரி சபாநாயகருக்கு தயாசிறி கடிதம்
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தொடர்பாக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் குறித்து தெளிவுபடுத்துமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் எழுதியுள்ளார்.
பிரதம நீதியரசரின் குடும்பச் சொத்துக்கள், தனிப்பட்ட ஆவணங்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நஷ்டஈடு வழக்கில் அவரது பங்களிப்பு உள்ளிட்ட பல தீவிரமான குற்றச்சாட்டுகளைப் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் சபையில் முன்வைத்திருந்ததாக தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதம நீதியரசரின் மகனுடன் தொடர்புடைய 185 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் கொழும்பிலுள்ள ஆடம்பர வீடொன்றைப் பெற்றுக்கொண்டமை.
நீதித்துறை நடவடிக்கை
சொத்து பிரகடனங்கள் மற்றும் அவற்றின் வருமான மூலங்கள் குறித்த சந்தேகங்கள். பிறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் உள்ளிட்ட தனிப்பட்ட ஆவணங்கள் தொடர்பில் எழுந்துள்ள கேள்விகள்.
எக்ஸ்பிரஸ் பேர்ல் நஷ்டஈடு வழக்கு தொடர்பான நீதித்துறை நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் குறித்த கரிசனைகள்.

குடும்பச் சொத்துக்களுக்கும் நஷ்டஈடு வழங்கும் நடைமுறைகளுக்கும் இடையே முறையற்ற செல்வாக்குச் செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தகவல்கள் என சில குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இக்குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை குறித்துத் தான் எந்தவொரு முடிவிற்கும் வரவில்லை என தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை
இவற்றை அலட்சியப்படுத்துவது நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் என எச்சரித்துள்ளார்.
இக்குற்றச்சாட்டுகள் உண்மை எனக் நிரூபிக்கப்பட்டால், அவை நீதித்துறையின் சுயாதீனம், ஒழுக்கநெறிகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் மீது பாரிய கேள்விகளை எழுப்பும் என்பதால், தகுதியான சுயாதீன அதிகாரசபைகளால் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாறாக, இவை பொய்யானவை என்றால், நாடாளுமன்றத்தில் இதுபோன்று பகிரங்கமாகப் பேசப்பட்டது பிரதம நீதியரசரின் நற்பெயருக்கும் நீதித்துறையின் கண்ணியத்திற்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் என்பதால், உண்மையைத் தெளிவுபடுத்துவது மிகவும் அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரதம நீதியரசரையோ அல்லது நீதித்துறையையோ அவமதிக்கும் நோக்கில் இந்தக் கோரிக்கை விடுக்கப்படவில்லை என்றும், குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும், பொய்யாக இருந்தால் நீதித்துறை கட்டமைப்பின் நாணயம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தனது நோக்கம் எனவும் தயாசிறி ஜயசேகர தனது கடிதத்தில் நிறைவாகக் குறிப்பிட்டுள்ளார்.