தாயின் தாலிக்கொடி மாயம்! உறவினரைச் சிக்கவைத்து நாடகமாடிய மகள் கைது
மட்டக்களப்பில் காதலனின் பணத் தேவைக்காகத் தனது தாயின் 8½ பவுன் தாலிக்கொடியைத் திருடி, அதனை அடகு வைத்து பெற்ற 14 இலட்சம் ரூபாவை காதலனிடம் வழங்கியதாகக் கூறப்படும் 22 வயதுடைய யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், திருட்டுச் சம்பவத்தைத் திசைதிருப்பும் நோக்கில், வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் உறவினரான பெண்ணொருவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தி, அவரைக் கைது செய்யும் வகையில் நாடகமாடியுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாலிக்கொடி திருட்டு
கடந்த ஜூன் மாதம் 28ஆம் திகதி வீட்டிலிருந்த தாலிக்கொடி திருடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற உறவினரான பெண்ணொருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

எனினும், அவரிடமிருந்து திருடப்பட்ட தாலிக்கொடியை மீட்க முடியாத நிலையில், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் செல்லப்பட்டார்.
இந்நிலையில், பொலிஸ் பெரும் குற்றத்தடுப்புப் பிரிவின் புதிய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வை. விஜயராஜா தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணை
இதன்போது, தாலிக்கொடி திருடப்பட்ட இரண்டு நாட்களின் பின்னர், அதாவது ஜூன் 30ஆம் திகதி, வீட்டின் உரிமையாளரின் மகளான 22 வயதுடைய யுவதி தனது அடையாள அட்டையைப் பயன்படுத்தி தனியார் வங்கியொன்றில் தாலிக்கொடியை அடகு வைத்து 14 இலட்சம் ரூபாவைப் பெற்றுக்கொண்டமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, குறித்த யுவதியைக் கைது செய்து விசாரணை நடத்தியபோது, காதலனின் பணத் தேவைக்காகத் தாயின் தாலிக்கொடியைத் திருடி அடகு வைத்ததாகவும், பெற்றுக்கொண்ட பணத்தை அன்றைய தினம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வைத்து காதலனிடம் வழங்கியதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தனியார் வங்கியொன்றில் பணியாற்றும் குறித்த யுவதியின் காதலன் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட யுவதியை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, அவரை எதிர்வரும் டிசம்பர் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.