அணி தலைவருடன் கோபித்து கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறிய வீரர்
இங்கிலாந்துக்கு (England) எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியின் போது, வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப் ஆடுகளத்தை விட்டு வெளியேறிய நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் டெரன் சமி தெரிவித்துள்ளார்.
குறித்த போட்டியின் போது, அணியின் தலைவர் சாய் ஹோப்புடன் கருத்து வேறுபாடு காரணமாக வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.
இங்கிலாந்து அணியுடனான இறுதி ஒருநாள் போட்டியின் நான்காவது ஓவரின் போது, மேற்கொள்ளப்பட்ட களத்தடுப்பு வியூகத்தில் ஜோசப் திருப்தியடையவில்லை.
களத்தடுப்பு வியூகம்
இதனை அணி தலைவரிடம் பகிர்ந்துக்கொண்ட போதும், அணி தலைவர் களத்தடுப்பு வியூகத்தை மாற்றியமைக்க உடன்படவில்லை.
இந்தநிலையில், ஓவரின் முடிவில், ஜோசப் அறிவிக்காமல் மைதானத்தை விட்டு வெளியேறி ஓய்வறைக்கு சென்று விட்டார். இதன்போது, பயிற்சியாளர் டெரன் சமி, தடுத்தபோதும் அதனை ஜோசப் செவிமடுக்கவில்லை.
இதன் காரணமாக ஐந்தாவது ஓவரில், மேற்கிந்திய தீவுகள் அணி ஆடுகளத்தில் பத்து வீரர்களுடன் மாத்திரம் விளையாடியது. எனினும் ஆறாவது ஓவரில் ஜோசப் ஆடுகளத்துக்கு திரும்பி பந்து வீச்சை தொடர்ந்தார்.
இந்தநிலையிலேயே அல்சாரி ஜோசப், ஆடுகளத்தை விட்டு வெளியேறிய நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று சமி குறிப்பிட்டுள்ளார்.