வடமராட்சி கொத்தணிக்கான அபாய நிலை! சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற கோரிக்கை 1 day ago
யாழ். வடமராட்சி பகுதி புலோலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வடமராட்சி கொத்தணிக்கான அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட புலோலி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காய்ச்சல் காரணமாக கடந்த சனிக்கிழமை பருத்தித்துறை (மந்திகை) ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளைஞர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் ஆண்களுக்கான 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த போதே பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
குறித்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று பிற்பகல் முதல் குறித்த இளைஞர் தனிமைப்படுத்தப்பட்டு, அவர் சிகிச்சை பெற்று வந்த 7ஆம் விடுதி தற்காலிகமாக முடக்கப்பட்டு அதனுடன் தொடர்புடைய அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த சுகாதாரத் தரப்பினர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
இதுதவிர தொற்று உறுதி செய்யப்பட்ட இளைஞரது குடும்பமும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்ட இளைஞரிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மருதனார்மடத்தில் உள்ள மோட்டார்சைக்கிள் திருத்தகம் ஒன்றிற்கு அண்மையில் சென்றிருந்ததாகவும், அங்கு குடிக்கத் தண்ணீர் வாங்கி குடித்ததாகவும் தெரிவித்துள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் தகவல் வெளியிட்டிருந்தனர்.
தொடர்ந்தும் அவரிடம் பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு, பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்ட இளைஞர் கடந்த நாட்களில் பருத்தித்துறை, மந்திகை, நெல்லியடி உள்ளிட்ட வடமராட்சியின் பல இடங்களில் நடமாடியுள்ள நிலையில் அவருக்கு எந்த கொரோனா தொற்று மூலத்திலிருந்து தொற்று பரவியது என்பதுகுறித்து கண்டறியப்படவில்லை.
இந்நிலையானது வடமராட்சி கொத்தணி அபாய நிலையின் வெளிப்பாடாக அவதானிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் மேலும்தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்த தகவல்கள் பெறப்பட்டு அதனடிப்படையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் இவரைப் போன்ற தொற்றாளர்கள் சமூகத்தில் நடமாடிக்கொண்டிருக்கும் அபாயம் நீடிப்பதால் பொதுமக்கள் சுகாதார-பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றுமாறு சுகாதாரத் தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
மருதனார்மடம் கொத்தணி உருவாகியதை அடுத்து உடுவில், தெல்லிப்பழை, சண்டிப்பாய், சங்கானை, கோப்பாய், நல்லூர், சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தொடர்ந்தும் தொற்றாளர்கள் இனம்காணப்பட்டு வரும் நிலையில் வடமராட்சி பிராந்தியத்தில் எந்தவித தொற்றாளரும் அடையாளம் காணப்படாது இருந்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் தொற்றுறுதி செய்யப்பட்ட இளைஞர் மூலம் வடமராட்சி கொத்தணி உருவாகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகச் சுகாதாரத் தரப்பினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
சுகாதாரப் பிரிவினரது நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பதன் மூலமும், சுகாதார-பாதுகாப்பு நடவடிக்கையினை இறுக்கமாகக் கடைப்பிடித்து நடமாடுவதுடன், அநாவசிய பயணங்களைத் தவிர்ப்பதன் மூலமும் வடமராட்சி கொத்தணி பரம்பலை கட்டுப்பாட்டிற்குக்கொண்டுவர முடியும் என்பதையும் சுகாதாரப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.