கிளிநொச்சி - முல்லைத்தீவில் 85,905 வெடிபொருட்கள் அகற்றம்
வடக்கு பகுதியில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் SARV Humanitarian Demining Organization நிறுவனம், கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2026 மே மாதம் வரையிலான காலப்பகுதியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் இருந்து 85,905 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளரான ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ இன்று(19) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நிதியுதவி
அதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தின் தச்சடம்பன், அம்பகாமம், ஒழுமடு, மாங்குளம், கொக்காவில் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுகளின் கீழ் உள்ள பகுதிகளிலும், கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முகமாலை, கிளாலி, இயக்கச்சி, ஆனையிறவு பகுதிகளிலும், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தட்டுவன்கொட்டி பகுதியிலும், யாழ்ப்பாண மாவட்டத்தின் சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெற்பேலி பகுதியிலும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த காலப்பகுதியில் மொத்தமாக 38 இலட்சத்து 97 ஆயிரத்து 758 சதுர மீற்றர் பரப்பளவு சுத்திகரிக்கப்பட்டு, அதிலிருந்து 85,905 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
எதிர்கால திட்டங்கள்
இந்த நிலையில், இலங்கைக்கான ஜப்பான் தூதரக பிரதிநிதிகளான Kurokawa Eriko மற்றும் ஜனனி கந்தையா ஆகியோர் கடந்த மே 16 ஆம் திகதி ஸார்ப் நிறுவனத்துக்கு விஜயம் மேற்கொண்டனர்.

அவர்கள் ஸார்ப் நிறுவன அலுவலகம் மற்றும் மாங்குளம் பகுதியில் கண்ணிவெடி அகற்றப்பட்டு மீளக் கையளிக்கப்பட்ட பகுதிகளின் தற்போதைய முன்னேற்ற நிலைகளை பார்வையிட்டதுடன், தற்போது நடைபெற்று வரும் பணிகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளனர்.








ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam