வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஆபத்தான குற்றவாளிகள்! தீவிரமடையும் விசாரணை
நீதிமன்றத்தைப் புறக்கணித்து வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை நாட்டுக்கு மீண்டும் அழைத்துவர தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை பகுதியில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றுள்ள நபர்கள்
நீதிமன்றத்தைப் புறக்கணித்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை நாட்டுக்கு மீண்டும் அழைத்து வருவதற்கான விசேட நடவடிக்கை பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் 2026 ஆம் ஆண்டிலும் இத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் கடந்த 2024 ஆம் ஆண்டில் 10 சந்தேகநபர்களையும், 2025 ஆம் ஆண்டில் 11 சந்தேகநபர்களையும் வெளிநாடுகளில் இருந்து எம்மால் நாட்டுக்கு அழைத்து வர முடிந்தது.
இதற்கமைய கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து மற்றுமொரு சந்தேகநபர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு,வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் 3 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த சந்தேகநபரை கைது செய்வதற்கு இலங்கை பொலிஸாருக்கு வழங்கிய ஒத்துழைப்பு, பங்களிப்பு மற்றும் வழிகாட்டல்களுக்காக இந்திய அரசுக்கும், இந்திய தூதரகத்திற்கும், இந்திய பொலிஸ் அதிகாரிகளுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
விசேட விசாரணைகள் ஆரம்பம்
இவர் பல கொலைச் சம்பவங்கள், கொலை முயற்சி, காயங்களை ஏற்படுத்தியமை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற பல குற்றங்களுடன் தொடர்புடையவராவார்.

கடந்த 4 வருடங்களுக்கு அதிக காலம் வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்து இவ்வாறான குற்றச்செயல்களை முன்னெடுத்து வந்துள்ளார்.
தற்போது குறித்த சந்தேகநபரால் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் எந்த நாட்டிற்குச் சென்று தலைமறைவாகியிருப்பினும், நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்துத் தப்பிச் செல்பவர்களுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைபடுத்த சகல நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.