அம்பாறையில் ஆபத்தான நிலையில் உள்ள பாலம்: மக்கள் விடுத்துள்ள கோரிக்கை
அம்பாறை (Ampara) மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் அமைந்துள்ள பாலம் புனரமைப்பு செய்யப்படாமல் சேதமடைந்து காணப்படுவதால் அந்த பாலத்தை புனரமைப்பு செய்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.
இப்பாலத்தின் ஊடாக ஆயுர்வேத வைத்தியசாலை, உப தபாலகம், பாடசாலை, பள்ளிவாசல்கள் மற்றும் தொழில் நிமித்தமாக செல்வோர் அச்சத்துடன் பயணம் செய்கின்றனர்.
அத்துடன், இரவு வேளையில் எவ்வித மின் ஒளியும் இன்றி இருளில் முழ்கி காணப்படுவதனால் மாற்று பாதைகளை பாதசாரிகள் பயன்படுத்துவதை காண முடிகின்றது.
மக்கள் கோரிக்கை
இது தவிர, உடைந்து விழும் நிலையில் இந்த பாலம் காணப்படுவதாகவும் உடனடியாக மீள உடைத்து புனர்நிர்மாணம் செய்ய வேண்டும் என சாய்ந்தமருது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்பாலம் குறித்து மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுபவர்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வை தருவதாக கடந்த கால தேர்தல் மேடைகளில் வாக்குறுதி வழங்கினாலும் அவை எதுவும் நிறைவேற்றப்படுவதில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இவ்விடயம் குறித்து உரிய அதிகாரிகள் பல்வேறு காரணங்களை கூறிவருகின்ற நிலையில், இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்க முன்வர வேண்டும் என சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |