புலம்பெயர் தமிழ் அமைப்புகளால் ஏற்பட்டுள்ள ஆபத்து! - அச்சம் வெளியிட்டுள்ள இலங்கை அமைச்சர்
புலம்பெயர் தமிழ் அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து செய்யும் பொய் பிரசாரங்கள் காரணமாக அந்தந்த நாடுகளில் வாழும் சிங்களவர்களுக்கு அச்சுறுத்தல் நிலையொன்று உருவாகியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக கூறும் பொய் பிரசாரங்களை நிறுத்த அரசாங்கம் தலையிட்டு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“ இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் மிகப்பெரிய இனப்படுகொலை இடம்பெற்றதாகவும், அதில் தமிழ் மக்களுக்கு பாரிய அழிவு ஏற்பட்டதாகவும், 40 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றெல்லாம் சர்வதேச புலம்பெயர் அமைப்புகள் பிரசாரம் செய்துகொண்டுள்ளது.
இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே அடித்தளம் போட்டு வருகின்றது. கூட்டமைப்பினர் இங்கு பேசுவதை கொண்டே பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மூன்று இலட்சம் மக்கள் நெருக்கடி நிலையில் இருந்து இராணுவத்தினால் காப்பற்றப்பட்டனர். இந்த மூன்று இலட்சம் மக்களையும் கொன்று குவித்திருந்தால் இவர்கள் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியும்.
ஆனால் இராணுவம் அவர்களை காப்பாற்றியது. இப்போது கனடாவில் இனப்படுகொலை வாரம் என அனுஷ்டிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் அடுத்த பரம்பரை தமிழ் மக்கள் இலங்கையில் அடக்குமுறை இடம்பெறுவதாக நினைப்பார்கள்.
எனவே இவ்வாறான நடவடிக்கைகளை அரசாங்கம் நிறுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும். தமிழ் அமைப்புகளின் இந்த செயற்பாடுகள் காரணமாக அங்கு வாழும் சிங்களவர்களுக்கு அச்சுறுத்தல் நிலையே உருவாகியுள்ளது.
இது கனடாவில் மட்டுமல்ல, தமிழ் புலம்பெயர் அமைப்புகள் இருக்கும் சகல இடங்களிலும் இவ்வாறான செயற்படுகள் இடம்பெற்றால் அங்கு வாழும் சிங்கள மக்களுக்கு பாரிய அச்சுறுத்தல் நிலையொன்று உருவாகும்.
எனவே இதனை நிறுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
எம்மை நெருக்கடிக்குள் தள்ளி, அவர்களுக்கு ஏற்ற வகையில் இலங்கையில் ஆட்சிமுறை ஒன்றினை உருவாக்கிக்கொள்ளும் வேலைத்திட்டமே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.