இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! இரத்து செய்யப்படும் சத்திரசிகிச்சைகள்
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக எரிபொருளை பெற்றுக்கொள்ள சுகாதாரத்துறையினர் எரிபொருள் வரிசைகளில் காத்திருப்பதால் வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை மருத்துவர்கள் சங்கத்தின் உப தலைவர் விசேட வைத்தியர் சித்ரான் ஹதுருசிங்க மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் பற்றாக்குறையால் சுகாதாரத்துறை கடும் நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ளதுடன்,நாட்டில் சுகாதார அவசர நிலைமை நிலவுகின்றது. வைத்தியர்களால் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதய சத்திர சிகிச்சைகள் பாதிப்பு
மேலும் இதய சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளும் வைத்தியர்கள் தமது சேவைகளை முன்னெடுத்து செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது. மகப்பேற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வைத்தியர்களும் சிகிச்சைகளை இரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எரிபொருளை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கின்றமையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக எளிமையாக மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைகள் கூட தற்போதைய சூழ்நிலையால் இன்று சிக்கலானவையாக மாற்றமடைந்துள்ளன. இதற்கான பொறுப்பினை அரசாங்கமே ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.