மகிந்த ராஜபக்சவின் கீழ் பணியாற்றிய அதிகாரிகளுக்கு ஆபத்து! பெரும் செல்வந்தர்களானது எப்படி..
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கீழ் பணியாற்றிய அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற 2005ஆம் ஆண்டு முதல் அவரது பதவிக் காலம் முடியும் வரை பணியாற்றிய அனைத்து அதிகாரிகளினதும் சொத்துக்கள் மற்றும் முறைகேடான வருமானம் குறித்து விசாரணை நடத்துமாறு குறித்த முறைப்பாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிவில் சமூக பிரதிநிதிகள் குழுவொன்று இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெரும் செல்வந்தர்களாக மாறிய அதிகாரிகள்
தற்போதைய அநுர தலைமையிலான அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினர் மீது நிதி மோசடி செய்ததாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தாலும், அவருக்குக் கீழ் மற்றும் அவரைச் சூழ்ந்திருந்த அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து கவனம் செலுத்தாமல் அமைதியான போக்கைக் கடைப்பிடிப்பதாக குறித்த சிவில் சமூக பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் முக்கியஸ்தரான அசேல சம்பத்,
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காலத்தில் பணியில் இருந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் வரம்பற்ற சொத்துக்கள் குறித்த தகவல்களை ஜனாதிபதி செயலகத்தில் உள்ள ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த தரவுகளின் அடிப்படையில் முறையான விசாரணை நடத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தான் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சேவையில் சேரும்போது எந்த சொத்துக்களும் இல்லாத சில அதிகாரிகள் பின்னர் மிகவும் செல்வந்தர்களாக மாறியுள்ளமை தொடர்பில் சந்தேகம் இருப்பதாகவும், பொதுமக்கள் மத்தியில் இந்த சந்தேகத்தைப் போக்க சுயாதீன விசாரணையை நடத்துவது அவசியம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.