வங்க கடலில் உருவான புயல் : 16பேர் பலி - 8 இலட்சம் மக்கள் பாதிப்பு
மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷில் உள்ள பல கடலோர நகரங்களை அழித்த 'ரிமால்' சூறாவளி காரணமாக இந்தியா மற்றும் பங்களாதேஷில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 800,000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த புயலால் பல நகரங்களின் மக்களுக்கு மின்சார விநியோகம் தடைபட்டுள்ளதுடன் பல வீடுகள் இடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சூறாவளியின் தாக்கத்தினால் பெருமளவான மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன், புயலுடன் பெய்த அடைமழையினால் பல நெடுஞ்சாலைகள் நீரில் மூழ்கியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
மணிக்கு 130 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் பங்களாதேஷின் சிட்டகாங்கிற்கு அனைத்து உள்நாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமன்றி சிட்டகாங் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த 10க்கும் மேற்பட்ட கப்பல்கள் தொலைதூரக் கடலில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்தில் இருந்து பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் அனுப்பப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |