மலையகத்தில் மினி சூறாவளி தாக்கம்! இருவர் உயிரிழப்பு
வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் சூறாவளி அதிதீவிர சூறாவளியாக வலுவடைந்துள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று (08) இலங்கையின் மலையக பகுதியில் மினி சூறாவளி தாக்கம் ஏற்பட்டுள்ளது.
நுவரெலியா
கடும் காற்றினால் நுவரெலியா மாவட்டம் வலப்பனை, உடப்புஸலாவை, ருப்பஹா, கந்தப்பளை ஆகிய பல இடங்களில் பாரிய மரங்கள் முறிவு ஏற்பட்டு பாதிப்புக்களை உருவாக்கியுள்ளது.
இராகலை புரூக்சைட் பகுதியில் வீதியில் பயணித்து கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீது மரம் வீழ்ந்து விபத்துக்கு உள்ளான நிலையில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், முச்சக்கர வண்டி சாரதி உட்பட மூவர் பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், உடப்புஸ்ஸல்லாவ கல்கட பத்தனையில் வீடு மீது பாரிய மரக்கிளை வீழ்ந்து ஒருவர் இன்று (08) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
வலப்பனை-நில்தண்டாஹின்ன ரூப்பஹா மற்றும் உடப்புஸலாவை -மடுல்ல பிரதேச பிரதான வீதிகளில் பாரிய மரங்கள் வேருடன் சரிந்து மின் கம்பங்கள் முறிந்துள்ளது.
வீதி போக்குவரத்தை சீர்செய்ய அங்கு மரங்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனால் இப்பிரதேசத்திற்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், வலப்பனை பிரதேசத்திற்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
மேலும் உடப்புஸ்ஸல்லாவ-மெத்திவரன நிவாச பகுதியில் வீடொன்றின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் மீது மரம் ஒன்று முறிந்து வீழ்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வலப்பனை பிரதேசத்தில் வீசும் பலத்த காற்றினால் அனர்த்தங்களை பல இடம்பெற்று வருகிறது.
பாரிய மரங்கள் காணப்படும் இடங்களில் வசிப்போர் அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா இடர் முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் கந்தப்பளை -இராகலை வீதியில் கொங்கோடியா பகுதியில் பிரதான வீதியில்
முறிந்து வீழ்ந்த மரத்தின் அகற்றும் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்படுகிறது.
மேலும், இராகலை உயர் நிலை பாடசாலையின் கட்டடம் ஒன்றின் மீது பாரிய மரம் வீழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பதுளை
இன்று (08.12.2022) காலை வீசிய பலத்த காற்றின் காரணமாக பசறை நமுனுகுலை வீதியில் 12ம் கட்டைப் பகுதியில் பாரிய மரங்கள் முறிந்து விழுந்தமையினாலும், அதே வீதியில் அம்பலம் பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து விழுந்தமையினாலும் பசறை பண்டாரவளைக்கான பிரதான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதோடு, மரங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் இராணுவ படையினர் ஈடுப்பட்டுள்ளனர்.
ஹொப்டன் 19ம் கட்டை பெருந்தோட்ட பகுதியில் வீடொன்றின் மீது மரம் முறிந்து விழுந்தமையினால் குறித்த வீட்டில் பெண்ணொருவர் காயமுற்ற நிலையில் லுணுகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை அரச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
அத்துடன் லுணுகலை பொலிஸ் சோதனை சாவடியின் மேல் மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்தமையினால் குறித்த சோதனை சாவடி சேதமடைந்துள்ளது.
மேலும், லுணுகலையில் இருந்து ஜனதாபுர ஊடாக மடூல்சீமை செல்லும் வீதி ஜனதாபுர பகுதியில் வீதியில் மின்கம்பம் ஒன்று முறிந்து விழுந்தமையினால் அவ்வீதியினூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
அத்துடன் நமுனுகுலை பொலிஸ் நிலையத்தின் கூரைகள் காற்றினால் சேதமடைந்துள்ளதோடு, நமுனுகுலை பகுதியில் பம்பரகல பத்தன, கந்தசேன, இந்துகல, பிங்கராவ, கனவரல்ல ஆகிய பகுதிகளில் வீட்டு கூரைகள் காற்றினால் சேதமடைந்துள்ளதோடு, சில வீடுகளுக்கு மேல் மரக்கிளைகளும் முறிந்து விழுந்துள்ளன.
பசறை பகுதியில் கோணக்கலை மேற்பிரிவில் வீடொன்றின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்தமையினால் குறித்த வீடு சேதமடைந்ததோடு அப்பகுதியிலும் சில வீட்டு கூரைகள் காற்றினால் சேதமடைந்துள்ளன.
மேலும் மீதும்பிடிய, எல்டப், டெமேரியா, மீரியபெத்த, கமேவெல, ஆக்கரத்தன்ன, பசறை நகர் ஆகிய பகுதிகளிலும் காற்றினால் கூரைகள் சேதமடைந்துள்ளன. மேலும் மடூல்சீமை, றோபேரி பகுதிகளில் வீட்டு கூரைகள் காற்றினால் சேதமடைந்துள்ளன.
அத்துடன் பசறையிலிருந்து இங்குருகடுவ செல்லும் வழியாக புத்தல செல்லும் வீதியில் பாரிய மரங்கள் முறிந்து விழுந்தமையினால் குறித்த வீதியுடனான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. இக்காற்றின் காரணமாக அன்றாட தொழிலில் ஈடுபடுவோரும் பெருந்தோட்டப் பகுதிகளில் தோட்ட தொழிலில் ஈடுபடுவோரும் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
இதேவேளை, இந்த மினி சூறாவளி காரணமாக சுமார் 26 பாடசாலைகளுக்கு தற்காலிக விடுமுறை வழங்கப்பட்டது.
இந்நிலையில், நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை வெள்ளிக்கிழமை (9) விடுமுறையாக கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.














பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

விண்வெளியில் இருந்து கூட அமெரிக்காவை தாக்க முடியாது - கோல்டன் டோமை அறிமுகம் செய்த டிரம்ப் News Lankasri
