சைபர் குற்றச் செயல்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு : விடுக்கப்படும் எச்சரிக்கை
2025 ஆம் ஆண்டில் சைபர் குற்றங்களுடன் தொடர்புடைய 318 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த ஆண்டில் 2,000க்கும் அதிகமான சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் எப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.
இந்த சைபர் குற்றவாளிகளின் முக்கிய இலக்காக நாட்டின் இளைஞர் சமூகமும், முதியவர்களும் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக இணையத்தை பயன்படுத்த தொடங்கியவர்களும் இக்குற்றவாளிகளின் இலக்காக மாறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு பெற பொதுமக்கள் விழிப்புடன்
இதுகுறித்து பொதுமக்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றும், தங்களின் கடவுச்சொற்கள், தனிப்பட்ட தகவல்கள், வங்கி விவரங்கள் போன்றவற்றை இவ்வகை சந்தேகத்துக்குரிய தரப்பினரிடம் வழங்குவதிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
சிலர் மிகவும் பிரபலமான நபராகவோ அல்லது பிரசித்தி பெற்ற நிறுவனத்தின் பெயரிலோ தொடர்பு கொண்டு, உங்கள் தொலைபேசி எண், கடவுச்சொல் மற்றும் OTP குறியீடுகளை பெற்றுக்கொண்டு, உங்கள் வங்கி கணக்குகளில் இருந்து இலட்சக்கணக்கான பணத்தை மோசடியாக எடுத்துச் செல்ல முடியும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

‘நீங்கள் இலட்சாதிபதி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள்’, ‘பெரிய லொத்தர் பரிசு வென்றுள்ளீர்கள்’ போன்ற செய்திகளை அனுப்பி மக்களை ஏமாற்றுகின்றனர் என தெரிவித்துள்ளார்.
அந்த பரிசுத் தொகையை பெறுவதற்காக குறிப்பிட்ட நடைமுறையை பின்பற்ற வேண்டும் என கூறி, தனிப்பட்ட தகவல்கள், OTP எண்கள் மற்றும் வங்கி விவரங்களைப் பெற்றுக்கொள்கிறார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறு மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும், சில பெற்றோர்கள் மற்றும் இளைஞர்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த பணத்தை குற்றவாளிகளுக்கும் மோசடிக்காரர்களுக்கும் தாரைவார்த்து விடுகின்றனர் என அவர் எச்சரித்துள்ளார்.
சைபர் குற்றங்களிலிருந்து பாதுகாப்பு பெற பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டிய அவசியம் அதிகரித்து வருவதாகவும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
குணசேகரன் செய்த விஷயத்தால் பெண்கள் உச்சக்கட்ட அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam