ஜனாதிபதியின் யோசனைக்கு சுங்கத் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு
ஊழல் நிறைந்த அதிகாரிகளை அகற்றுவதற்கான தீர்வாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்ட மூன்றாம் தரப்பு அல்லது இராணுவத்தை கடமைகளில் ஈடுபடுத்துவதற்கான யோசனையை சுங்கத் தொழிற்சங்கங்கள் எதிர்த்துள்ளன.
சர்வதேச சுங்க தினமான நேற்று சுங்கத் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போதே இந்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சமீபத்திய கருத்துக்கள் குறித்து தமது முழு அதிருப்தியையும், கடுமையான கவலையையும் தாம் வெளிக்காட்டுவதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
சுங்க அதிகாரிகள் பொதுவாக ஊழல் மிக்கவர்கள் என்று ஜனாதிபதி கூறுவது நியாயமில்லை என்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
சுங்கத்திணைக்களம், இலங்கையின் வரி வருவாயில் 50 வீதத்துக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டுகின்றது.
இந்தநிலையில், நாட்டின் முதல் குடிமகனிடமிருந்து இது போன்ற கருத்துக்களைக் கேட்க மனச்சோர்வு ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.