சட்டப்படி பணி இயக்கத்தை தொடரவுள்ள சுங்கத்துறை ஊழியர்கள்
சுங்கத்துறை ஊழியர்கள், அதிகாரிகளுடனான கலந்துரையாடல் தோல்வியடைந்தமையை அடுத்து தங்களின் சட்டப்படி பணி இயக்கத்தை தொடர முடிவு செய்துள்ளனர்.
ஆரம்பத்தில், சுங்கத்துறை அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் அதிகாரிகள் கூடுதல் மணிநேரம் வேலை செய்வதைப் புறக்கணித்தனர்.
இருப்பினும், அவர்களால் இன்று முற்பகல் 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட கடுமையான சட்டப்படி பணி இயக்கம் மாலை 4.45 மணி வரை நீடித்துள்ளது.
திறைசேரியின் தீர்மானம்
இதன்போது ஊடகவியலாளர் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்த சுங்க அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அமில சஞ்சீவ, சுங்க அதிகாரிகள் வெகுமதி நிதியை நிதியமைச்சின் கீழ் கொண்டு வர திறைசேரி எடுத்த தீர்மானமே தொழிற்சங்க நடவடிக்கைக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தற்போதைய நிலை தொடர்ந்தால், இறக்குமதியாளர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள எச்சரித்துள்ளார்.
மேலும், உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்கள் உற்பத்தியாளர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் மட்டுமே சுங்க அதிகாரிகளால் அனுமதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை சுங்க ஊழியர்களால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கையின் விளைவாக கொழும்பு துறைமுகத்தில் குறைந்தது 4,000 கொள்கலன்கள் கையாளப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |