போதைப் பொருட்களுடன் சுங்க பரிசோதகர்கள் கைது
கொக்கேய்ன், போதைப் கலந்த முத்திரைகள் மற்றும் குஷ் என்ற போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த சுங்க பரிசோதகர்கள் இருவரை பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கட்டுநாயக்க மற்றும் தனியார் களஞ்சியங்களில் கடமையாற்றி வந்த சுங்க அதிகாரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு துறைமுகத்தில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் சுங்க அதிகாரிகள்
துறைமுகத்தில் சுங்க அதிகாரிகள் சிலர் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளமாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து ஒரு சுங்க பரிசோதகர் துறைமுகத்தில் இருந்து வெளியேறும் போது நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சுங்க பரிசோதகர் வசம் போதைப் கலந்த முத்திரைகள் இருந்துள்ளதுடன் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து அவருக்கு இந்த போதைப் பொருளை வழங்கிய மற்றைய சுங்க பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துறைமுகத்தில் ஒரு அறையில் வைத்து கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபரிடம் இருந்து குஷ் என்ற போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து அவர் காருக்குள் மறைத்து வைத்திருந்த கொக்கேய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அறையில் காணப்பட்ட நிலையில் வெற்று அஞ்சல் பொதிகள் மூன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் அஞ்சல் பரிமாற்றம் செய்யும் மத்திய நிலையத்திற்கு வரும் போதைப் பொருள் அடங்கிய பொதிகளை பெற்று அவற்றை போதைப் பொருள் விற்பனையாளர்களுக்கு விநியோகித்து வந்துள்ளதுடன் போதைப் பொருள் விற்பனையிலும் ஈடுபட்டு வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதுடன் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியக அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.