தெற்கு அந்தமான் தீவுக்கு அருகில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையின் தற்போதைய நகர்வு
வங்காள விரிகுடாவில் தெற்கு அந்தமான் தீவுக்கு அருகில் கடந்த வாரம் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது பலவீனமடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் விரிவாக கூறுகையில், "தெற்கு அந்தமான் தீவுக்கு அருகில் கடந்த வாரம் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது பலவீனமடைந்து வருகின்றது. இந்த தாழமுக்கம் கிழக்கு கடற்பிராந்தியத்துக்கு அப்பாலுள்ள ஆழமான கடலிலேயே நிலை கொண்டுள்ளது.
தளம்பல் நிலை
எனவே, அந்த பகுதியில் மாத்திரம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படும். இதன்போது குறித்த கடற்பகுதியில் தளம்பல் நிலை ஏற்படக் கூடும்.
குறிப்பாக காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை ஊடாக பொத்துவவில் வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளில் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
இதன் மறைமுக தாக்கத்தால் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அதிகரிக்கக் கூடும். மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். இங்கு 30 - 50 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும்” என எச்சரித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |