பெற்றோருக்கு கிடைத்த சலுகை இனி இல்லை! ஜனாதிபதியாக கனவு காண்பவருக்கு தற்போதைய அமைச்சர் அறிவுரை
எதிர்காலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற கனவு காண்பவர்கள், தங்களின் பெற்றோர் ஆட்சிக் காலத்தில் அனுபவித்த பழைய சலுகைகள் இனி ஒருபோதும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் நாட்டில் நிலவி வந்த பண பலத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்திற்குச் சென்ற பழைய அரசியல் கலாசாரம் இனி நடைபெறாது என்பதை மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
சாதாரண மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை..
முன்னைய ஆட்சிகளில் குறிப்பிட்ட சில குடும்பங்களும், அவர்களின் நண்பர்களும் அதிகாரத்தையும், சிறப்புச் சலுகைகளையும் தங்களுக்குள்ளேயே பகிர்ந்து அனுபவித்து வந்ததோடு தாங்கள் செய்த தவறுகளுக்கு ஒருபோதும் சட்டத்தின் முன் தண்டனை கிடைக்காது என்று நம்பியிருந்தனர்.
ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளது. நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக மாறியுள்ளது. இதனால் எவ்வித தவறும் செய்யாத சாதாரண பொதுமக்கள் சட்டத்தைக் கண்டு அச்சம் கொள்ள வேண்டியதில்லை.

மாறாக கடந்த காலத்தில், சட்டத்திற்கு அப்பாற்பட்டு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியவர்களும், தவறுகளில் ஈடுபட்டவர்களுமே தற்போதைய நீதித்துறை மற்றும் நீதிபதிகள் மீது தவறான கருத்துக்களை வெளியிட்டும், அச்சமடைந்தும் வருகிறார்கள்.
தற்போதைய ஆட்சியில் ஜனாதிபதி, அமைச்சர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் என யாருக்கும் எந்தவித சிறப்புச் சலுகைகளும் வழங்கப்படவில்லை.

ஜனாதிபதி உட்பட அனைவரும் சாதாரண பொதுமக்களைப் போலவே தங்களது அன்றாடப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே மக்களுக்குப் பொறுப்புக்கூறும் வகையில், தற்போதைய அரசாங்கத்தை விட மிகச் சிறந்த நிர்வாகத்தை வழங்கக்கூடிய ஒரு அரசியல் தரப்பினால் மட்டுமே இனி இலங்கையில் ஆட்சிக்கு வர முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
வீட்டில் இருந்து உணவுப் பொட்டலங்களை கொண்டு வருவதாக கூறிய அநுர தரப்பு! 24 கோடி ரூபாவுக்கு கணக்கு கேட்கும் அரசியல்வாதி