கடந்த காலத்திருந்து தற்போதைய அரசு பாடம் கற்க வேண்டும் : லசந்த அழகியவண்ண வலியுறுத்தல்
மாகாண சபைத் தேர்தலை உரிய காலத்தில் நடத்தாத காரணத்தாலேயே கடந்த காலங்களில் மக்கள் எம்மை வீட்டுக்கு அனுப்பினார்கள் என்றும், எனவே கடந்த காலத் தவறுகளில் இருந்து தற்போதைய அரசு பாடம் கற்றுக்கொள்வது அவசியம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் கூறுகையில், "மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாகவும், கூட்டு எதிரணி சார்பிலும் நாம் தொடர்ச்சியாக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றோம்.
எமது கட்சியை நிராகரித்த மக்கள்
'உங்களது ஆட்சிக்காலத்திலும் தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லையா?' என எம்மைக் பார்த்துச் சிலர் கேள்வி எழுப்பலாம். ஆம், அன்று நாம் தேர்தலை ஒத்திவைத்தது முற்றிலும் தவறுதான்.

அதற்கான தகுந்த பதிலைத்தான் மக்கள் அடுத்த வந்த தேர்தல் ஊடாக எமக்கு வழங்கினார்கள்.
தேர்தலை நடத்தத் தவறிய எமது கட்சியை நிராகரித்த மக்கள், தேர்தலை முறையாக நடத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய தரப்பினரை ஆதரித்தனர்.
எனவே, தேர்தல் ஒத்திவைப்புத் தொடர்பில் கடந்த கால வரலாற்றில் இருந்து அரசு பாடங்களைக் கற்றுக்கொண்டால் நல்லது.
எமது தரப்பு எப்போதும் மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டிலேயே உள்ளது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.