இலங்கையில் நடைமுறைக்கு வரும் இந்திய ரூபா..! திணறும் மத்திய வங்கி (Video)
இலங்கையை பொறுத்தமட்டில் இந்திய ரூபா இங்கே வரும் போது அந்த இந்திய ரூபாவை தொடர்ந்து, இலங்கையில் பிரபலப்படுத்தி இலங்கை ரூபாவின் செல்வாக்கை இழக்கச் செய்து இந்திய ரூபாவை தான் இலங்கையில் பயன்படுத்த வேண்டும் என்ற நிலைமைக்கு கொண்டுவருவார்கள் என்ற அச்சம் பெரும்பான்மை மக்களிடம் காணப்படலாம், ஆனால் அதற்கான நடைமுறைகள் இப்போது இங்கே கிடையாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையில் வரலாற்று அடிப்படையில் இந்திய நாணயம் மட்டுமல்லாமல் கிரேக்கம் போன்ற நாடுகளின் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டமைக்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.
ஆகவே வணிக நடவடிக்கைகளின் போது வெளிநாட்டு நாணயங்கள் இலங்கையில் பயன்படுத்தப்படுவது என்பது ஒரு புதுமையான நடவடிக்கை அல்லது யாழ்ப்பாணத்தில் இந்திய ரூபாவின் புழக்கம் இருப்பது புதுமையான விடயம் அல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும், இலங்கை மத்திய வங்கியானது தனது இரு கொள்கை வட்டி வீதங்களை குறைத்தது. ஆகவே வணிக வங்கிகள் தங்களது வட்டி வீதங்களை இதற்கு ஏற்ப சீராக்கிக் கொள்ள வேண்டும். இதன் பின்னரும் மிக உயர்ந்த வட்டி வீதங்களை அறிவிட முடியாது. அவை குறைய வேண்டும்.
ஆனாலும் கூட அரச வங்கிகள் உள்ளடங்களாக வணிக வங்கிகள் இன்னும் கடன் மீதான வட்டி வீதங்களை குறைக்கவில்லை. மத்தியவங்கியின் கட்டளைகளை அல்லது அறிவுறுத்தல்களை வணிக வங்கிகள் உடனடியாக ஏற்று நடப்பதாக தெரியவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |