நீதிக்கான ஓலம்: சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணையும் தமிழர் தரப்பு
கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் கோரி, சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் “நீதிக்கான ஓலம்” போராட்டம் இன்று(14.8.2026) யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் ஆரம்பமானது.
இதன்போது செம்மணி உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல்வேறு படுகொலைச் சம்பவங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை நினைவுகூரும் வகையில் காட்சிப்படுத்தல்கள் இடம்பெற்றன.
கடந்த காலத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்ததுடன், அவர்களுக்கான நீதி இதுவரை முழுமையாக கிடைக்கவில்லை என்ற வலியையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வெளிப்படுத்தினர்.
முக்கிய கோரிக்கை
இதேவேளை, இந்த நீதிக்கான போராட்டத்தின் அடுத்த முக்கிய கட்டமாக எதிர்வரும் 17ஆம் திகதி யாழ்ப்பாணம் பொது நூலகத்திலிருந்து பேரணி ஆரம்பிக்கப்பட்டு, ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் வரை சென்று மகஜர் கையளிக்கப்படவுள்ளது.

தமிழர் தாயகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விவகாரம் மற்றும் நீண்டகாலமாக தீர்வு காணப்படாத மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்நாட்டு பொறிமுறைகளுக்கு அப்பால், சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்படுகிறது.
நீதிக்கான ஓலம்” என்பது கடந்த காலத்தை மட்டும் நினைவுகூரும் நிகழ்வல்ல; உண்மையை வெளிக்கொண்டு வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதற்கான தொடர்ச்சியான குரல் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அழைப்பு
எனவே, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்கள் மற்றும் படுகொலைகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தோளோடு தோள் நின்று, சர்வதேச விசாரணை, உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் இந்தப் பயணத்தில் அனைத்து தரப்பினரும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

செம்மணியில் எழுந்த நீதிக்கான குரல், எதிர்வரும் 17ஆம் திகதி யாழ்ப்பாணம் பொது நூலகத்திலிருந்து ஐ.நா. அலுவலகம் வரை செல்லும் பேரணியில் மேலும் வலுப்பெறவுள்ளது.