மக்களின் உணவுத் தேவைகளையே புறக்கணித்த NPP அரசின் போலி வரவு செலவுத்திட்டம் - எழுந்துள்ள குற்றச்சாட்டு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் முற்றிலும் தோல்வியடைந்த ஒன்றாகும் என ஊழல் தடுப்பு இயக்கத்தின் அழைப்பாளர் நிரோஷன் பாதுக்க கடுமையாக விமர்சித்துள்ளார்.
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தில் நேற்று(15.11.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
86 சதவீதம் மக்கள் மீது கடுமையான வரிகள்
நாட்டில் உண்மையான பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள் டி.எஸ்.சேனநாயக்க மற்றும் ஜே.ஆர்.ஜெயவர்தன ஆகியோர் மட்டுமே என்று சுட்டிக்காட்டிய நிரோஷன் பாதுக்க, தற்போதைய அரசு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில் வெறும் 33 சதவீதத்தை மாத்திரமே செலவிட்டுள்ளது என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.
புதிய வருமான வழிகளை உருவாக்காமல், வரவு - செலவுத் திட்டச் செலவினங்களில் 86 சதவீதத்தை மக்கள் மீது கடுமையான வரிகளைத் திணிப்பதன் மூலமே அரசு பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றது.

சுங்கத் திணைக்களத்திலிருந்து விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் மற்றும் என்.டி.பி. வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 14 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி மோசடி குறித்து ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் மௌனம் காத்தார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் சனத்தொகையில் 63 சதவீதத்தினர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள நிலையில், அடிமட்ட மக்களுக்குப் பொருளாதாரப் பலன்களில் 3.6 சதவீதம் மட்டுமே கிடைக்கின்றது என்றும் அவர் கூறினார்.
அடிப்படை உணவுத் தேவைகளின்றித் தவிக்கும் மக்கள்
மக்கள் அடிப்படை உணவுத் தேவைகளின்றித் தவிக்கும்போது சிகிரியாவுக்கு இலத்திரனியல் நுழைவுச்சீட்டு வழங்குவது மற்றும் மின்சார தொடருந்து சேவைகள் குறித்துப் பேசுவது கேலிக்கூத்தானது என்று தெரிவித்த அவர், 1,753 பில்லியன் ரூபா வரவு - செலவுத் திட்டப் பற்றாக்குறையை ஈடுகட்டப் பெறப்படும் கடன்களால் வட்டி வீதமும் பணவீக்கமும் 8.3 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அஸ்வெசும நலன்புரித் திட்டம் வெட்டிச் சுருக்கப்பட்டுள்ளது என்றும், விவசாயிகளைப் புறக்கணித்துவிட்டு அரசு பிரபல வர்த்தகர்களுடன் இணைந்து செயற்படுகின்றது என்றும் நிரோஷன் பாதுக்க குற்றம் சுமத்தினார்.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்காக ஒதுக்கப்பட்ட 20 பில்லியன் ரூபாவால் எவ்விதப் பலனும் கிடைக்கவில்லை என்று தெரிவித்த அவர், ஒதுக்கப்பட்ட நிதியைக் கூடச் செலவிட முடியாத ஜனாதிபதி, நாட்டை ஆள்வதை விட சேமிப்பு வங்கியின் தலைவராக இருப்பதே பொருத்தமானது என்றும் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சியின் உரை வரிசையைத் தீர்மானிப்பது எதிர்க்கட்சியே தவிர பிரதமர் அல்ல என்று தெரிவித்த அவர், மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை வழங்கிய மக்கள் இன்று அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் மேலும் தெரிவித்தார்.