நாமல் ராஜபக்ஷவுக்கு இராஜாங்க அமைச்சரால் அனுப்பப்பட்ட கடிதம் குறித்து கடும் விமர்சனம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான பிரியங்கர ஜயரத்ன இளைஞர் மற்றும் விளையாட்டு விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில், சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சுக்கு எழுதாமல், புத்தளம் மாவட்டத்திற்கு 100,000 கொரோனா தடுப்பூசிகள் தேவை என்று நாமல் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்தமையே இந்த விமர்சனத்துக்கான காரணமாகும்.
நாமலுக்கு அனுப்பிய கடிதத்தில், புத்தளம் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக மெதுவாக நடைபெற்று வருவதாகவும், தடுப்பூசிகளைப் பெறுவதற்கு ஏராளமான மக்கள் அவரிடம் உதவி கோரியுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த கடிதத்தின் நகல் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் புத்தளம் மாவட்டச் செயலகத்தின் செயலாளருக்கும் அனுப்பப்பட்டது.
சம்பந்தப்பட்ட அமைச்சர்களைத் தவிர்த்து, தனது பொறுப்புக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் கருத்து தெரிவித்ததற்காக நாமல் ராஜபக்ஷ, கடந்த மாதங்களில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.