தமிழர் பிரதேசத்தில் தமிழ் தெரியாத தமிழ் தாதி
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி பொதுமக்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. ஏற்படுத்தி வருகின்றது.
மக்களின் வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம் என்று பல்வேறுத் துறைகளும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக ஆட்டம் கண்டு விட்டது.
வைத்தியசாலைகளில் நெருக்கடி
குறிப்பாக பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்தததன் பின்னர் நாட்டில் இருந்து வெளியேறிய கல்விமான்கள் தொகை அதிகம். அதிலும் வைத்தியர்களின் வெளியேற்றமானது வைத்தியசாலைகளில் பாரிய சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாகச் சொல்லப் போனால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னால் வைத்தியசாலையில் இருந்த வைத்தியர்களை விட தற்போது இருக்கும் வைத்தியர்கள் தொகை குறைவாக காணப்படுவதுடன், சில வைத்தியசாலைகளில் தேவையான மருத்துவ வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.
நகரங்களை விட இந்த நிலை மலையகத் தோட்டப் புற மக்களை கடுமையாக பாதித்துள்ளது.
குறிப்பாக ஹட்டன்(Hatton) பகுதியில் இருக்கக் கூடிய மிகப் பிரதானமான அரச வைத்தியசாலை, சுற்றியிருக்கும், பொகவந்தலாவ, ஹட்டன், தலவாக்கலை, கொட்டகலை உள்ளிட்ட பிரதான நகரங்களை உள்ளடக்கிய மிக அதிகளவான தோட்டப்புறங்களில் உள்ள மக்கள் பயன்படுத்தும் பிரதான வைத்தியசாலையாகக் காணப்படுகின்றது.
கடந்த சில வருடங்களுடன் ஒப்பிடும் போது தற்போது இங்கு பல நோய்களுக்கு சிகிச்சைப் பெற முடியாத நிலை காணப்படுகின்றது. இங்கிருந்து நுவரெலியா(Nuwara Eliya) பிரதான வைத்தியசாலைக்கும், கண்டி(Kandy) தேசிய வைத்தியசாலைக்கும் நோயாளிகளை அனுப்பி வைக்கும் நிலமையே உள்ளது.
மேலும், நோயாளிகள் தங்களது நோய் தொடர்பான ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதில் நாட்கணக்கில் அலைந்து திரிய வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தோட்டத் தொழிலாளர்கள் அதிகமாக பயன்படுத்தும் வைத்தியசாலையாக இது காணப்படும் நிலையில், இங்கு வைத்தியச் சேவைகளைப் பெற்றுக் கொள்ள வரும் மக்களும் தோட்டத் தொழிலாளர்களே.
நாட்சம்பளத்திற்காக பணிபுரியும் மக்கள் இவ்வாறு தங்களது வைத்திய ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு காலை முதல் மாலை வரை காத்திருப்பதன் காரணமாக அவர்களுடைய தொழில் பாதிப்படைகின்றது.
ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தான் என்றாலும் அந்த இரண்டு நாட்களுக்கான சம்பளம் அவர்களது அந்த மாதத்திற்கான செலவில் ஒரு தாக்கத்தைச் செலுத்துவதாகவே காணப்படுகின்றது.
அடுத்தது, நோயாளிகளின் ஆவணங்களை சரியான முறையில் பேணுவதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
தொடர்ந்து சிகிச்சைப் பெற வேண்டிய, சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒரு நோயாளியின் ஆவணத்தில் திகதியை மாற்றி எழுதியதன் காரணமாக சத்திரசிகிச்சைக்காக அந்த நோயாளி ஒரு வருடமாக காத்திருக்க வேண்டிய துயர நிலை அண்மையில் பதிவானது.
மொழிப் பிரச்சினை
இவை அனைத்தையும் தாண்டி இருக்கக் கூடிய மிகப் பெரிய சிக்கல் மொழிப் பிரச்சினை. அதிகமாக தமிழர்களைக் கொண்டுள்ள பகுதியில் உள்ள இந்த வைத்தியசாலைகளில் பெருமளவில் சிங்களம் பேசக் கூடிய ஊழியர்களே அதிகளவில் இருக்கின்றனர்.
இலங்கையில் பல்வேறு அரச நிறுவனங்களிலும், வைத்தியசாலைகளிலும், வங்கிகளிலும் இவ்வாறு சிங்கள மொழிப் பேசக்கூடிய ஊழியர்கள் கடமையாற்றுவது வழமை தான் எனினும், தமிழ் தெரிந்த தமிழ் ஊழியர்கள் கூட தமிழில் பேசாது சிங்களத்தில் பேசுவது சேவைகளைப் பெற்றுக் கொள்ள வருபவர்களுக்கு பாரிய சிரமங்களை ஏற்படுத்துகின்றது.
அண்மையில், மேற்குறிப்பிட்ட வைத்தியசாலையில் பணியாற்றும் ஒரு தமிழ் தாதி சிங்களம் தெரியாத புரிந்து கொள்ள முடியாத ஒரு நோயாளியிடம் சிங்களத்தில் பேசியதுடன், அது அவருக்கு புரியவில்லை என்பதால் முகம் சுழித்த வண்ணம் பேசியதை கண்ணால் காண முடிந்தது.
தங்களது நோய்க்காக மருந்து பெற்றுக்கொள்ள, வருத்தத்துடன் வரும் ஒரு நோயாளிக்கு, ஒரு முதியவருக்கு வழிகாட்டாமல் இவ்வாறு புரியாத மொழியையும், முகம் சுழிப்பையும் காட்டினால் அதுவே அவர்களுக்கு மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்துவதுடன் அவர்களது இயல்பையும் பாதிக்கின்றது.
தாங்கள் ஒன்றல்ல பல மொழிகள் கற்றிருந்தாலும் கூட இவ்வாறான முதியவர்களிடத்திலும், நோயாளிகளிடத்திலும் தங்களது மொழித்திறனை காட்டுவது எவ்வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடியது என்ற கேள்வி எழுகின்றது.
அதேசமயம், நோயாளிகளைப் பார்வையிட வருபவர்களிடத்திலும் கூட முகம்சுழிக்கும், மிரட்டும் தொணியிலான பேச்சுக்களை பேசுவதும், ஒருவருக்கு புரியவில்லை என்றால் அதை மீள கூறாமல் திட்டுவதும் கூட சம காலத்தில் வைத்தியசாலைகளில் அதிகரித்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
தமிழர் பிரதேசத்தில் தமிழில் உரையாற்ற ஏன் ஒரு அரச உத்தியோகத்தர் வெட்கப்பட வேண்டும்... ஏன் சேவைகளைப் பெற்றுக் கொள்ள வரும் ஒரு முதியவரை அசௌகரியத்திற்குள்ளாக்க வேண்டும், அச்சப்படுத்த வேண்டும்.
வைத்தியர் பற்றாக்குறை, மருந்து பற்றாக்குறை இவற்றையெல்லாம் தாண்டி இது போன்ற சிக்கல் நிலைகளும் கூட மக்களை கடுமையாக பாதிப்படையவேச் செய்கிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Benat அவரால் எழுதப்பட்டு, 01 April, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.