‘‘அமெரிக்காவில் உள்ள மூன்று முக்கியஸ்தரின் முடிவால் இலங்கைக்கு ஏற்படும் நெருக்கடி’’
இலங்கைக்குள் முதலீட்டாளர்கள் வருகை தருவதற்கு பயப்படுகின்றனர்.அமெரிக்காவில் வசித்து வரும் மூன்று ஞானிகளே இதற்கு காரணம். அதாவது நாட்டினுடைய கடன் தரத்தை நிர்ணயிக்கும் நிறுவனங்கள், இலங்கையின் கடன் தரத்தை குறைத்து தீர்மானிக்கின்றமையே இதற்கான காரணம் என பிரித்தானியாவில் இருக்கக்கூடிய அரசியல் விமர்சகர் இதயச்சந்திரன் ( IthayaChandran)தெரிவித்துள்ளார்.
சீனாவில் நிலவி வரும் மின் துண்டிப்பிற்கான காரணம்,அதன் பின்னணி ,இதன் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள ஆபத்து என்பன தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கைக்குள் சர்வதேச பொருளாதார முதலீட்டாளர்கள் வருகை தராமை,முதலீடு செய்யாமைக்கு இலங்கையின் கடன் தரத்தை குறைத்து தீர்மானிக்கும் மூன்று ஞானிகளே காரணம்.இவர்கள் மூவரும் அண்மைய நாட்களாக இலங்கை தொடர்பில் முரணான கருத்துக்களையே தெரிவித்து வருகின்றனர்.
இலங்கையின் பிரச்சினையை பொருத்த வரையில் இறக்குமதி செய்வதற்கான நாணய பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாகவே இறக்குமதியினை குறைத்துள்ளனர்.அமெரிக்க டொலரின் பற்றாக்குறை காரணமாகவே இலங்கையில் இறக்குமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
இருப்பினும், இலங்கை வங்குரோத்து நிலைக்கு செல்ல ஒரு போதும் சீனா ,அமெரிக்கா விடாது. காரணம் கடனை அதிகமாக கொடுத்து அதனை செலுத்த முடியாத பட்சத்தில் அழுத்தங்களை கொடுத்து இலங்கையை கைப்பற்றுவதே சீனாவின் உத்தி.
அமெரிக்காவினை பொருத்தவரையில், இலங்கைக்கு பொருளாதார தடையை விதிக்க வேண்டிய அவசியமில்லை.அவர்கள் பேரம் பேசும் நிலையையே ஆரம்பித்துள்ளனர்.அதற்கமையவே, அமெரிக்காவில் இந்த மூன்று ஞானிகளும் செயற்பட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
சீனாவில் ஏற்பட்டுள்ள மின் துண்டிப்பு பிரச்சினை, நிலக்கரி பற்றாக்குறை காரணமாக உலக நாடுகள் அனைத்தினதும் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படவுள்ளதாகவும்,இந்தியாவில் காணப்படும் 135 அணல் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக அடுத்த வாரங்களில் பெரும் நெருக்கடி ஏற்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.