வடமாகாண பிரதம செயலாளரின் பொருத்தமற்ற நியமனத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடி
முன்னாள் கல்வி அமைச்சின் செயலாளராகவும் தற்போதைய வடமாகாண பிரதம செயலாளராகவும் செயற்படும் இளங்கோவனால் வழங்கப்பட்ட அதிபர் நியமனம் தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நியமனம் பெற்ற பதில் அதிபரால் அவர் கடமையாற்றும் பாடசாலையில் அசௌகரியமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.இதனால் அங்கு பாரிய நெருக்கடி நிலை தோன்றியுள்ளது.
2021 ஆம் ஆண்டு நேர்முக பரீட்சைக்கு தோற்றாத ஒருவருக்கு பதில் அதிபர் நியமனம் வழங்கி பாடசாலையின் பொறுப்புக்களை அவரிடம் ஒப்படைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது பல முறைகேடான நிகழ்வுகளுக்கு காரணமாய் அமைந்துள்ள போதும் உரிய தீர்வுகள் இதுவரை பெற்றுக் கொடுக்கப்படவில்லை.
பதில் அதிபர் நியமனம்
கடந்த 2021 ஆம் ஆண்டு முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபர் நியமனம் கோரி வடமாகாண கல்வி அமைச்சினால் பத்திரிகை விளம்பரம் மேற்கொள்ளப்பட்டது.
நேர்முக பரீட்சைக்கு தோற்றிய ஒருவரையே பாடசாலைக்கு பொருத்தமானவர் என்ற அடிப்படையில் நியமனம் செய்யக்கூடிய சூழலில் நேர்முக பரீட்சைக்குத் தோற்றாத ஒருவரை முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய இளங்கோவனால் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்திற்கு பதில் அதிபராக நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
இது அதிகார துஸ்பிரயோகம் என பாடசாலை நலன் விரும்பிகள் பலரால் தற்போது சுட்டிக்காட்டப்பட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பொருத்தமற்ற விளைவுகள்
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய பதில் அதிபராக கடமையாற்றும் நாகேந்திரராசா பல்வேறு மோசடி குற்றங்களில் ஈடுபட்டு உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினால் ஜனாதிபதி அலுவலகம், ஆளுநர் செயலகம் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சு என பல்வேறு தரப்பினருக்கு இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளைத் தொடர்ந்து பிரதம செயலாளர் செயலகத்தினால் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் சுயாதீன விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டது.
அவ்வாறே வடமாகாண கல்வி அமைச்சினால் வடமாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர் தலைமையிலான சுயாதீன விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டிருந்தது.
இவ்விசாரணைக் குழுக்களினால் தீவிர விசாரணைகள் நடைபெற்று குற்றங்கள் மற்றும் மோசடிகள் இனங்காணப்பட்டு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதாகவும் உறுதிப்படுத்திய உள்ளக தகவல்கள் வெளிப்படுத்துகின்றன.
அத்துடன் ஜனாதிபதி அலுவலகத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய அவ் அலுவலகத்தினால் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபர் தொடர்பான விசாரணை அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு மத்திய கல்வி அமைச்சிற்கும் கட்டளைகள் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வலயக்கல்வி அலுவலகம்
முன்னாள் கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவனின் தகுதியற்றவருக்கான அதிபர் நியமனத்தினால் அப்பாடசாலை பாரியளவிலான பாதிப்புக்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்திற்கு சொந்தமான பல இலட்சம் பெறுமதியான அசையும் அசையா சொத்துக்கள் அதிபரால் மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும் இனம் காணப்பட்டுள்ளது.
துணுக்காய் வலயக்கல்லிப் பணிப்பாளர் மாலதி முகுந்தனால் மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு முகவரியிடப்பட்ட கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
அதிபர் சி. நாகேந்திரராசாவின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் மாணவர்களது கல்வி, ஒழுக்கம் மற்றும் நலன்புரி நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளது.
பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட வெளிவாரி மதிப்பீட்டில் குறைவான புள்ளிகளை பெற்றுள்ளதுடன் இப் பாடசாலை 1AB பாடசாலையாகவும் SLPS 2 தர அதிபர் கடமையாற்றுவதாகவும் சுட்டிக்காட்டியதுடன் இவ் அதிபர் மீது தன்னால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான அறுவுறுத்தல்களையும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கணிணி ஆய்வு கூடம்
ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட வலயமட்ட கணனி ஆய்வுகூட மேற்பார்வை அறிக்கையில் கணினி ஆய்வுகூடம் சீரான பராமரிப்பில் இல்லை எனவும் பழுதடைந்த கணினிகள் பதிவளிக்கப்படாததுடன் கணினிகளில் உதிரிப்பாகங்களில் 15 RAM உட்பட பல பாகங்கள் இல்லை எனவும் கணினி ஆய்வுகூட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோசடியான அதிபர்
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய பதில் அதிபராக கடமையாற்றும் நாகேந்திரராசா மீது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இவர் கடமையாற்றிய முல்லைத்தீவு பண்டாரவன்னியன் மகா வித்தியாலயம் மற்றும் முல்லைத்தீவு முத்தையன்கட்டு வலதுகரை மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளிலும் மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
இவர் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் மறைமுக அரசியல் செல்வாக்கினால் மறைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
அரசியல் அழுத்தம்
ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அசையும் அசையா சொத்துக்களில் மோசடியில் நாகேந்திரராசாவின் நண்பனாகிய முன்னாள் யாழ் மாவட்ட நா்ாளுமன்ற உறுப்பினர் ஒருவரை பயன்படுத்தி அரசியல் அழுத்தம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிபர் சி. நாகேந்திரராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், அவரது சகோதரனாகிய தற்போதைய யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மற்றும் ஒட்டுசுட்டான் தபால் ஊழியர் ஆகியோர் இணைந்து ஒரு குழுவாக வட மாகாணக் கல்விப் பணிப்பாளரை (முன்னாள்) சந்தித்துள்ளனர்.
அச் சந்திப்பின் போது அதிபர் நாகேந்திரராசா மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டாம் எனவும் மோசடி செய்யப்பட்ட அசையும் அசையா சொத்துக்களின் பெறுமதியினை மீள செலுத்துவதாகவும் உயர் அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய சூழலில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய இளங்கோவன் தற்போது வடமாகாண பிரதம செயலாளராக உள்ளார்.
வடமாகாண கல்வியமைச்சில் செயலாளராக கடமையாற்றிய போது பதில் அதிபராக நியமனம் செய்யப்பட்டிருந்த ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகளுக்கு இவர் விரைவாக நடவடிக்கை மேற்கொள்வாரா என்ற கேள்வியும் ஏழமால் இல்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |