மல்லாவி ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இடர்பாடு: பொதுமக்கள் முன்வைத்துள்ள கோரிக்கை
முல்லைத்தீவு - மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கான சட்ட வைத்திய அதிகாரி இதுவரை நியமிக்காமையினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை உறவினர்கள் பெற்றுக்கொள்வதில் பெரும் இடர்பாடுகளை எதிர்கொண்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கான சட்ட வைத்திய அதிகாரி இதுவரை நியமிக்காமையினால் மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய பகுதி விபத்து மற்றும் அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்களை உறவினர்கள் பெற்றுக்கொள்வதில் பெரும் இடர்பாடுகளை எதிர்கொண்டுள்ளனர்.
சுமார் 110கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்திய சாலைக்குக் கொண்டு சென்று சடல பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதாக பல்வேறு தரப்புகளாலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இருந்தபோதும் குறித்த பிரதேசத்தில் திடீர் மரண விசாரணை அதிகாரிகள் கூட நியமிக்கப்படாத நிலை காணப்படுகின்றது. இவ்வாறு மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கான சட்ட வைத்திய அதிகாரி இன்மை, பிரதேசத்துக்கான திடீர் மரண விசாரணை அதிகாரிகளின்மை காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்களைப் பெற்றுக்கொள்வதில் உறவினர்கள் பெரும் இடர்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
இப்பிரதேசத்தில் உயிரிழந்த ஒருவரின் சடலத்தை மல்லாவி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அங்கிருந்து உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.
மாவட்ட பொது வைத்தியசாலையில் சிரமங்களின்றி உடற்கூற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் உறவினர்கள் சடலத்தைப் பொறுப்பேற்றுக் கொண்டு வருவதற்கும் கிட்டத்தட்ட 110 கிலோ மீட்டர் தூரத்திற்குச் சடலங்களைக் கொண்டு சென்று மீளவும் 110 கிலோமீற்றர் துரத்திற்குக் கொண்டு வந்து இறுதிக் கிரியைகளைச் செய்ய வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் பெரும் பெரும் பணச்செலவை எதிர்கொள்வதுடன் உறவினர்கள், குடும்பத்தினர் பெரும் சிரமங்களுக்கு ஆளாகி விடுகின்றனர். இதேவேளை வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்கள் பல மடங்கு துன்பங்களை அனுபவித்து வருகிறன.
எனவே குறித்த மல்லாவி வைத்தியசாலைக்குச் சட்ட வைத்திய அதிகாரியை நியமிக்குமாறும் குறித்த
பிரதேசங்களுக்கான திடீர் மரண விசாரணை அதிகாரிகளை நியமிப்பதற்குச்
சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச பொதுமக்களும்
பொது அமைப்புக்களும் கோரியுள்ளனர்.



