சுவீடன் நாட்டில் சிறுவர்களைப் பயன்படுத்தி வன்முறைச் செயல்களில் ஈடுபடும் குற்றக் குழுக்கள்
சுவீடன் நாட்டில் குற்றக் குழுக்கள் சிறுவர்களைப் பயன்படுத்தி வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க, குற்றவியல் பொறுப்புக்கான (Criminal Responsibility) குறைந்தபட்ச வயது வரம்பை 15இலிருந்து 13ஆகக் குறைக்க அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
சுவீடனில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் (Gangs) பெருகிவிட்டதாகவும், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க 15 வயதிற்கும் குறைவான சிறுவர்களைக் கொலை மற்றும் குண்டுவெடிப்பு போன்ற செயல்களுக்குப் பயன்படுத்துவதாகவும் நீதி அமைச்சர் கன்னர் ஸ்ட்ரோமர் தெரிவித்துள்ளார்.
இந்த வயதுக் குறைப்பு அனைத்துக் குற்றங்களுக்கும் பொருந்தாது எனவும் கொலை, கொலை முயற்சி, கடுமையான குண்டுவெடிப்பு, பாலியல் வன்புணர்வு மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற மிகக் கொடூரமான குற்றங்களில் ஈடுபடும் 13 வயது சிறுவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் எனவும் அவர் தெரிவித்தார்.
குற்றக் கும்பல்கள்
கடந்த பத்து ஆண்டுகளில் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சம்பந்தப்பட்ட குற்றப் பதிவுகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக சுவீடன் தேசிய குற்றத் தடுப்பு பேரவை தெரிவித்துள்ளது.

அரசின் இந்த முடிவுக்குப் பொலிஸார் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வயது வரம்பைக் குறைப்பதால், குற்றக் கும்பல்கள் இன்னும் குறைவான வயதுடைய (உதாரணமாக 10-12 வயது) சிறுவர்களைக் குற்றங்களுக்குப் பயன்படுத்தத் தொடங்கும் எனப் பொலிஸார் எச்சரிக்கின்றனர்.
சிறுவர்களைச் சிறையில் அடைப்பது அவர்களின் உரிமைகளைப் பாதிக்கும் என்றும், அவர்களுக்குத் தண்டனையை விடச் சீர்திருத்த முறைகளே அவசியம் என்றும் சமூக ஆர்வலர்கள் வாதிடுகின்றனர்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் சுவீடனில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தச் சட்டமூலம் வரும் கோடை காலத்திலேயே அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri