நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற குற்றங்களும் கைது நடவடிக்கைகளும்!
நாட்டின் பதிவாகியுள்ள குற்றச் செயல்கள் குறித்தும் கைது நடவடிக்கைகள் குறித்தும் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, வவுனியா, தாண்டிக்குளம் பகுதியினை சேர்ந்த 10 வயது பாடசாலை மாணவி ஒருவரைக் கடந்த 4 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவத்தில் சிறுமியின் சகோதரன் மற்றும் சிறிய தந்தையார் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் இன்றைய தினம் (31.03.2023) தெரிவித்துள்ளனர்.
வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் வசிக்கும் 10 வயது மாணவியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பாலியல் துஷ்பிரயோகங்கள் - வவுனியா
மேலும் வவுனியாவிலுள்ள பாடசாலை ஒன்றில் 5ஆம் தரத்தில் கல்வி கற்று வரும் குறித்த மாணவி, கடந்த வாரம் தனது வகுப்பு சக மாணவிகளிடம் தனக்கு வீட்டில் நடக்கும் கொடுமைகளையும், பாலியல் துஷ்பிரயோகங்களையும் கூறி அழுதுள்ளதுடன், குறித்த விடயத்தை தனது வகுப்பாசிரியரிடம் தெரியப்படுத்தியுள்ளார்.
சம்மந்தப்பட்ட மாணவியிடம் சம்பவத்தின் உண்மைத் தன்மையை விசாரித்து அறிந்து கொண்ட ஆசிரியர் , உடனடியாக வவுனியா மாவட்ட செயலகத்தின் சிறுவர் நன்னடத்தை பிரிவுக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
அவர்கள் வவுனியா பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவுக்குத் தெரியப்படுத்தியதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்துள்ளனர்.
குறித்த 10 வயது மாணவி மூவரால் கடந்த 4 வருடங்களாகத் தொடர்ச்சியாக பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டுள்ளார் என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மூவர் கைது
இதனையடுத்து, 10 வயது மாணவி வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் தாயின் இரண்டாவது கணவரான இறம்பைக்குளம் அலகர பகுதியைச் சேர்ந்த 32 வயது நபர், மாணவியின் உடன் பிறந்த சகோதரனான சமனங்குளம் பகுதியைச் சேர்ந்த 16 வயது இளைஞர், உறவினரான வைரவபுளியங்குளம் பகுதியை சேர்ந்த 53 வயது நபர் ஆகிய மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின் மூவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும், சிறுமியை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு விளக்கமறியல் - யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்- எழுதுமட்டுவாழில் கஞ்சா பொதி மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் தேடப்பட்டு வந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 9 ஆம் திகதி அரச புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், கொடிகாமம் பொலிஸார் எழுதுமட்டுவாழில் சுற்றிவளைப்பு மேற்கொண்ட போது, 16 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதியைக் கைவிட்டு இருவர் தப்பியோடியுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களின் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. அந்த மோட்டார் சைக்கிள் மன்னார்- சிலாவத்துறையில் கடமையாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரின் பெயரில் பதிவாகியிருந்துள்ளது.
அந்த பொலிஸ் உத்தியோகத்தர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்பட்டுள்ளதுடன், இச்சம்பத்தில் தொடர்புடைய மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான பொலிஸ்
அவர் பெருந்தொகை பணத்தைப் பரிமாற்றம் செய்து வந்த விபரங்களையும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர். கைதான பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டுள்ளார்.
தனது மோட்டார் சைக்கிளை மூத்த சகோதரனே பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார். அவரது மூத்த சகோதரனும் பொலிஸ் உத்தியோகத்தரே. அவர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவராவார். இந்த சமயத்தில் அவர் தலைமறைவாகியுள்ளார்.
சட்டத்தரணிகள் ஊடாக சரண்
இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை சட்டத்தரணிகள் மூலம் அவர் சாவகச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சாவகச்சேரி தொகுதிக்கிளை தலைவரும் சட்டத்தரணியுமான கே.சயந்தன் உள்ளிட்ட 3 சட்டத்தரணிகள் ஊடாக அவர் சரணடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சரணடைந்த பொலிஸ் உத்தியோகத்தரை பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க கொடிகாமம் பொலிஸார் அனுமதி கோரியுள்ளனர். எனினும் , நீதிமன்றம் அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளதுடன், 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
கேரளா கஞ்சா கடத்தல் - கல்முனை
மோட்டார் சைக்கிளில் 1 கிலோ கேரளா கஞ்சாவினை கடத்திய சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்றைய தினம் (30.03.2023) கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கல்முனை பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன், மேற்குறித்த கேரளா கஞ்சா போதைப்பொருளைக் கடத்தி செல்வதற்காக தயாராக இருந்தவளை அம்பாறை - சாய்ந்தமருது வைத்து சந்தேக நபர் மோட்டார் சைக்கிளுடன் கைதாகியுள்ளார்.
விசேட அதிரடிப்படை
இவ்வாறு கைதான சந்தேக நபரிடம் இருந்து தொலைப்பேசி ஒன்று , 1 கிலோ பொதி செய்யப்பட்ட கேரளா கஞ்சா, ஒரு தொகை பணம் , மோட்டார் சைக்கிள் , என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் சான்று பொருட்களுடன் சாய்ந்தமருது பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
நீண்ட காலமாகப் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த குறித்த சந்தேக நபரை விசேட அதிரடிப்படையினர் மாறுவேடத்தில் சென்று நீண்ட போராட்டத்தின் பின்னர் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
