நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரும் அளவுக்கு நான் செய்த குற்றம் என்ன - விமல் வீரவன்ச கேள்வி
பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் சம்பந்தமாக அமைச்சர் விமல் வீரவன்ச அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களுக்கு அவர் பதிலளித்துள்ளார்.
மகிந்தவுக்கு ஆதரவான பிரசாரத்தை ஆரம்பித்த முன்னோடிகளில் ஒருவர் என்ற முறையிலும் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக பதவிக்கு கொண்டு வருவதை உண்மையாக மாற்ற பங்களிப்பு வழங்கிய ஒருவர் என்ற முறையில் நான் தவறு செய்திருந்தால், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரும் அளவுக்கு தான் செய்ய குற்றம் என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீர்கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உயர் பதவியில் இருக்க வேண்டும் என்று கூறியதால், பிரதமர் மகிந்த ராஜபக்ச அந்த கட்சியின் தலைவர் பதவியில் இருக்கக் கூடாது என்ற அர்த்தமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் என்ன நிலைப்பாட்டை கொண்டுள்ளீர்கள் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள வீரவன்ச, சிறுவர்கள் பொருட்களை உடைப்பதால், அது குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை எனக் கூறியுள்ளார்.