நாட்டில் அதிகரிக்கும் பல்வேறு குற்றச் சம்பவங்கள்: பொலிஸாரின் கைது நடவடிக்கைகள் (Photos)
நாடளாவிய ரீதியில் பல்வேறு குற்றசெயல்கள் நாளுக்கு நாள் பதிவாகி வருகிறது. அவை தொடர்பில் பொலிஸார் தீவிர நடவடிக்கைளை மேற்கொள்வதுடன், சந்தேகநபர்களையும், குற்றவாளிகளையும் கைது செய்கின்றனர்.
மன்னார்
மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள உமநகரி கிராமத்தில் தனிமையில் வசித்து வந்த வயோதிப தம்பதியை தாக்கி 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 30 பவுனுக்கு மேற்பட்ட தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் கூரை ஓடுகளை உடைத்து மூன்று கொள்ளையர்கள் வீட்டினுள் நுழைந்த நிலையில் ஆயுதங்களால் தம்பதியினர் இருவரையும் சரமாரியாக தாக்கி பணம் மற்றும் தாலிக்கொடி உட்பட 30 பவுனுக்கு மேற்பட்ட நகைகளை களவாடிச் சென்றுள்ளனர்.
பலத்த காயங்களுக்கு உள்ளான பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார், முருங்கன், பொலிஸார் மற்றும் தடயவியல் பிரிவினர் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு பார்வையிட்ட பின் முருங்கன் பொலிஸார் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த வீட்டில் சில வருடங்களுக்கு முன்பும் பாரிய திருட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
செய்தி:ஆஷிக்
திருகோணமலை
திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 13 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் ஓய்வு பெற்ற முன்னாள் கடற்படை வீரரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரப்பட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் குறித்த சந்தேகநபரை நேற்றைய தினம் (16) முன்னிலைப்படுத்திய போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பத்தாம் கட்டை -கிதுல் ஊத்துவ பகுதியில் வசித்து வரும் துசித ரத்ன வீரர் ( 46 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கடந்த டிசம்பர் மாதம் தொடக்கம் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள குறித்த நபர் இந்த சிறுவனுடன் நட்பாக பழகி வந்துள்ள நிலையில் அவரது உறவினர்கள் இல்லாத நேரத்தில் குறித்த சிறுவனுக்கு மயக்க மாத்திரையை கொடுத்து ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த வேளை குறித்த சிறுவனை துஸ்பிரயோகம் செய்ததாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
செய்தி: பதுர்தீன் சியானா
முல்லைத்தீவு
முல்லைத்தீவு- மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட செல்வபுரம் கிடாய்பிடிய்த்த குளம் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்டதாக நட்டாங்கண்டல் பொலிஸாரினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நட்டாங்கண்டல் பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலை அடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான விசேட பொலிஸ் குழு குறித்த கைது நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.
இதேவேளை புதையல் தோண்டுவதாக கிடைத்த தகவல் அறிந்து சென்ற பொலிஸ் குழு சம்பவ இடத்தை சுற்றி வளைத்தபோது நால்வர் தப்பி சென்றதாகவும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் கைதான சந்தேக நபர் மாங்குளம் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய குடும்பஸ்தர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையின் போது வெளிமாகாண பதிவிலக்கமுடைய கனரக வாகனம் மற்றும் இரு மோட்டர் வண்டிகள் மற்றும் புதையல் தோண்ட பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் பொருட்கள் பொலிசாரால கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 19ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
செய்தி: கீதன்
யாழ்ப்பாணம்
புத்தூர் சந்தி, தட்டாங்குளம் பகுதியில் இரண்டு கிராம் 550 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரை இம் மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டுள்ளார்.
இவ் வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்ற போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக சாவகச்சேரி மதுவரி நிலையத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியாக தகவலை அடுத்து நேற்று (16) காலை 9.00 மணியளவில் அப் பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது அப் பகுதியைச் சேர்ந்த 32 வயது சந்தேக நபரிடம் இருந்து இரண்டு கிராம் 550 மில்லிக் கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டது.
சந்தேகநபரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது அவரை இம் மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஏ.ஜூன்சன் உத்தரவிட்டார்.
செய்தி:தீபன்
யாழ்ப்பாணம்
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் மாதகல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மடிக்கணினி களவாடப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த களவுச் சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் பொலிஸார், நேற்று முன்தினம் (15) மாதகல் தாயபுரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவரை மடிக்கணினியுடன் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞன் நேற்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட வேளை அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
செய்தி: கஜிந்தன்
யாழ்ப்பாணம்
கடந்த 14ஆம் திகதி பலாலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலாலி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, தந்தை, மகன் மீது வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அயல் வீட்டாருடன் இடம்பெற்ற முரண்பாடு கைகலப்பாகிய நிலையில் இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரின் இரகசிய தகவலின் அடிப்படையில் பலாலி பொலிஸார், வாள்வெட்டினை மேற்கொண்ட ஒருவரை நேற்று முன்தினமும் மற்றைய இருவரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் பலாலி பொலிஸார் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
செய்தி:கஜிந்தன்
முல்லைத்தீவு
முல்லைத்தீவு காடுகளில் வாழும் அரியவகை மிருகங்களில் ஒன்றான பாரிய அழுங்கினை இறைச்சிக்காக பிடித்து சென்றவரை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் கைது செய்துள்ளார்கள்.
இக் கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு- துணுக்காய் தேராங்கண்டல் பகுதியில் இறைச்சிக்கு பயன்படுத்த இருந்த நிலையில் இருந்த ஆமடில்லா (அழுங்கு) என்றழைக்கப்படும் அரியவகை மிருகம் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து துணுக்காய் தேராங்கண்டல் பகுதியில் சந்தேக நபர் ஒருவரின் வீட்டை பரிசோதனை மேற்கொண்ட போது குறித்த காட்டு விலங்கு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள 40 வயதுடைய சந்தேகநபரையும், விலங்கினையும் இன்று (17-12-2022) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
செய்தி:கீதன்
கிளிநொச்சி
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் 192 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் நேற்று (1612-2022) இரவு மாவட்ட விசேட குற்ற தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
192 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணைகளின் பின் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செய்தி:யது





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 5 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
