இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவிற்கு கிடைத்துள்ள புதிய பதவி
2024 ஆம் ஆண்டு நிறைவடைந்த நிலையில், கிரிக்கெட் அவுஸ்திரேலியா, வழக்கமான வருடாந்த நிகழ்வாக, சர்வதேச ரீதியாக வீரர்களை தேர்ந்தெடுத்து, கடந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது.
இதன்படி, கிரிக்கட் அவுஸ்திரேலியா, அந்த அணிக்கான தலைவராக, அவுஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸையும், இந்தியாவின் ரோஹித் சர்மாவையும் புறக்கணித்து, ஜஸ்பிரித் பும்ராவை தெரிவு செய்துள்ளது.
இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு மாத்திரமே தலைமை தாங்கியுள்ள நிலையில் அவர் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறந்த அணி
இந்தநிலையில் அந்த அணியில் இங்கிலாந்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள், இந்தியா, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து தலா இரண்டு வீரர்கள் மற்றும் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில் இந்தியாவின் சிறப்பு துடுப்பாட்ட வீரரான யஸஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பெற்றுள்ளார். அவர் 2024 இல் 15 போட்டிகளில் 1478 ஓட்டங்களை பெற்று, மூன்று சதங்களை எடுத்துள்ளார்
ஜெய்ஸ்வாலுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக, இங்கிலாந்தின் பென் டக்கெட்டை கிரிக்கெட் அவுஸ்திரேலியா தேர்வு செய்துள்ளது.
சாதனை
அதைத் தொடர்ந்து இந்திய சச்சினின் சாதனைகளை முறியடிப்பார் என்று நம்பப்படும் ஜோ ரூட் 3வது இடத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார் மற்றுமொரு இங்கிலாந்து வீரரான ஹரி பரூக் இந்த அணியில் 5ம் இடத்தில் இடம்பெற்றுள்ளார்
நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திர 4வது இடத்தில் உள்ளார். துடுப்பாட்ட வரிசையில் இலங்கையின் வீரரான கமிந்து மெண்டிஸ் 6வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய விக்கெட் காப்பாளர் அலெக்ஸ் கேரி இடம் பெற்றுள்ளார்.
பந்துவீச்சு வரிசையில் பும்ரா, நியூசிலாந்தின் மேட் ஹென்றி மற்றும் ஜோஸ் ஹேசில்வுட் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாகவும், தென்னாப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் ஒரே சுழற்பந்து வீச்சாளராகவும் உள்ளனர்.