கோவிட் தொற்றால் காலாவதியான விசாவுடன் தவிக்கும் மாணவர்கள்
கோவிட் பெருந்தொற்றின் தொடக்கத்தில் அவுஸ்திரேலிய விசாவுக்கு விண்ணப்பித்த பட்டதாரி மாணவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாத நிலை நீடித்து வருகின்றது.
இந்த நிலையில், காலாவதியான விசாக்களை மீண்டும் நீட்டிக்கும்படி அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சரிடம் மாணவர்கள் முறையிட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் 476 எனும் விசா பிரிவின் கீழ் விசா பெற்று, கோவிட் எல்லை கட்டுப்பாடுகள் காரணமாக நுழைய முடியாமல் இருந்தவர்களின் விசாக்கள் நீட்டிக்கப்பட வேண்டும் என அவுஸ்திரேலிய பசுமைக் கட்சியின் மேலவை உறுப்பினர் நிக் மெக்கிமும் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தை உடனடியாக கவனிக்கும்படி அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை, குடியேறி சேவைகள் அமைச்சர் அலெக்ஸ் ஹாக் அவர்களுக்கு நிக் மெக்கிம் கடிதம் எழுதியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் 485 விசா துணைப் பிரிவின் கீழ் தற்போதைய மற்றும் முன்னாள் தற்காலிக பட்டதாரி விசாவாசிகளை கடந்த பெப்ரவரி 18ம் திகதி முதல் அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதித்ததற்கு குடிவரவுத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ள நிக் மெக்கிம், 476 விசா பிரிவின் கீழ் சிக்கல்களை எதிர்கொள்பவர்களுக்கான ஏற்பாடுகளையும் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
“புதிய 476(விசா துணைப்பிரிவு) விசாவாசிகள் எவ்வித பயண விலக்கின்றி அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்க முடியும் நிலையில், கோவிட் சூழலால் காலாவதியான ‘476’ விசாவாசிகள் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாத நிலை உள்ளது. அவர்கள் தொடக்கத்திலிருந்து மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியுள்ளது,” என நிக் மெக்கிம் தெரிவித்துள்ளார்.
கோவிட் சூழலால் பயணிக்க முடியாமல் Skilled Regional Provisional (subclass 489, 491 and 494) விசாக்களை கொண்டிருப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் விசா நீட்டிப்பை அவுஸ்திரேலிய அரசு வழங்கியுள்ளது.
அதே போல், தகுதி வாய்ந்த தற்காலிக
பட்டதாரி விசாவாசிகளுக்கு (485 துணைப்பிரிவு) செப்டம்பர் 30,2022 வரையிலான
விசா நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.