கோவிட் சிறப்பு தடுப்பூசி வாரச் செயற்றிட்ட உயர்மட்ட கலந்துரையாடல்(Photos)
கோவிட்- 19 நிர்வாக செயற்பாட்டின் கட்டுப்பாட்டை மேலும் வினைத்திறனாக்கும் நோக்கில் ஜனவரி மாதம் 11ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை கோவிட் சிறப்புத் தடுப்பூசி வாரமாகச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இச் செயற்பாட்டினை முல்லைதீவு மாவட்ட மட்டத்தில் விரைவுபடுத்தி மேற்கொள்வதற்கான கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் இன்று(10) இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் கோவிட்- 19 நோயைக் கட்டுப்படுத்துவதற்கும் பயனுள்ள தடுப்பூசி வேலைத்திட்டங்களை வெற்றியடையச் செய்வதற்கான வழிமுறைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கையில்,
கோவிட் -19 சிறப்புத் தடுப்பூசி காலப்பகுதியில் சுகாதார பிரிவினருக்குத் தேவைப்படும் உதவிகளை விரைவுபடுத்தி வழங்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.
மேலும் இதற்காக வலயக் கல்விப் பணிமனை, அரச சார்பற்ற நிறுவனங்கள், பிரதேச செயலக வளங்கள் ஆகியவற்றைத் திட்டமிட்டுப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தற்போது கோவிட் தொற்று குறைவு எனக் கருதி தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
எமது மாவட்டத்தில் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களின் புள்ளிவிவரங்கள் குறைவாகவே காணப்படுகிறது. இதற்காக எல்லோரும் பங்களிக்க வேண்டும். குறிப்பாகக் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் இது தொடர்பில் மக்களை விழிப்பூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பிரதேச செயலர்களைக் கேட்டுக் கொண்டார்.
இக் கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், மேலதிக அரசாங்க
அதிபர் க.கனகேஸ்வரன்,
உதவி மாவட்டச் செயலாளர் லிசோ கேகிதா,
உத்தியோகத்தர்கள் ஆகியோர் நேரடியாகவும் மற்றும் பிராந்திய சுகாதார
சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.உமாசங்கர், பிராந்திய தொற்று நோயியல்
வைத்திய அதிகாரி வைத்தியர் V.விஜிதரன், பிரதேச சுகாதார சேவைகள் பணிமனையின்
வைத்திய அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், உதவித்
திட்டமிடல் பணிப்பாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு
தரப்பினரும் ஜூம் செயலி வழியாகவும் கலந்து கொண்டிருந்தனர்.





