அமெரிக்காவில் முதல் ஒமிக்ரான் தொற்று உறுதியாளர் அடையாளம் காணப்பட்டார்
உலகம் முழுவதிலும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கோவிட்டின் புதிய திரிபான ஒமிக்ரான் திரிபினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இந்த ஒமிக்ரோன் தொற்றுறுதியாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த நவம்பர் மாதம் 22ம் திகதி தென் ஆபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய பயணி ஒருவரே இவ்வாறு ஒமிக்ரானினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த தொற்று உறுதியாளர் பூரணமாக தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர் என கலிபோர்னிய பொதுச் சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.
கலிபோர்னிய - கான்பிரான்ஸிஸ்கோ பல்கலைக்கழகத்தின் மரபணு வரன்முறையிடல் பரிசோதனையின் மூலம் குறித்த நபருக்கு ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் முதல் ஒமிக்ரான் தொற்று உறுதியாளர் பதிவாகியுள்ளதாக வெள்ளைமாளிகையும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களுக்கு சிறிதளவான நோய் அறிகுறிகள் மட்டுமே தென்பட்டதாகவும், நோயிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் மொடர்னா தடுப்பூசிகளை பூரணமாக ஏற்றிக்கொண்டவர் எனவும், பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்படவில்லை எனவும் தெரியவருகிறது.
எனினும் ஒமிக்ரோன் குறித்து அதிகளவில் மக்கள் பதற்றமடைய வேண்டியதில்லை என சான்பிரான்ஸிஸ்கோ பொதுச் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் டொக்டர் கிரான்ட் கொல்பெக்ஸ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.