புதுமணத் தம்பதியினர் உட்பட 136 பேருக்கு கோவிட் தொற்று! கோவிட் வைரஸின் புதிய திரிபு என சந்தேகம்?
குருநாகல் மாவட்டத்தில் அம்பன்பொல பிரதேசத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 250 க்கும் மேற்பட்டவர்களில் மணமகன் மற்றும் மணமகள் உட்பட 136 பேர் கோவிட் வைரஸ் தொற்றியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த நபர்களில் கண்டுபிடிக்கப்பட்டது கோவிட் வைரஸின் புதிய திரிபு எனவும் இது வேகமாக பரவுவதுடன் அதிக அறிகுறிகளைக் காட்டுவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஜனவரி 21 ஆம் திகதி அம்பன்பொல பிரதேசத்தில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்ட புதுமண தம்பதியர் உட்பட 136 பேருக்கு கோவிட் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஜனவரி 24 ஆம் திகதி குறித்த திருமணத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் அத்தனகல்ல பிரதேசத்தில் நடைபெற்றது. இரண்டு நாட்களிலும் 260 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது தெரியவந்தது.
கோவிட் வைரசால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்ட 136 பேரில் 96 பேர் மினுவாங்கொட உடுகம்பொல பகுதியைச் சேர்ந்தவர்கள். மற்றைய 40 பேர் அம்பன்பொல பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மணமகனின் உறவினர் ஒருவர் செய்த விரைவான ஆன்டிஜென் பரிசோதனையின் போதே கோவிட் பரவுதல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வின் முதல் நாளில் கலந்து கொண்ட பதினைந்து பேருக்கு விரைவான ஆன்டிஜென் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டதில் அவர்கள் 15 பேரும் கோவிட் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
15 பேரும் தங்கள் திருமண நாளில் குளிரூட்டப்பட்ட அறையில் குடித்துக்கொண்டிருந்ததாகவும்15 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதால் முதலில் பாதிக்கப்பட்ட நபரை அடையாளம் காண்பது கடினம் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுவரை 450 பேர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



