கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை 30 வீதத்தினால் உயர்வு
நாட்டில் கடந்த வாரத்துடன் ஒப்பீடு செய்யும் போது இந்த வாரத்தில் கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை 30 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
கோவிட் தடுப்பு குறித்த ராஜாங்க அமைச்சின் இணைப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கோவிட் மரணங்களின் எண்ணிக்கையும் கடந்த வாரத்தை விடவும் இந்த வாரம் 10 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
ஒட்சிசன் தேவைப்பாடுடைய நோயாளர்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகள் எண்ணிக்கையும் 5 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
கோவிட் மரணங்களில் மூன்றில் இரண்டு பேர் கோவிட் தடுப்பூசியை பூரணமாக ஏற்றிக் கொள்ளாதவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோவிட் பூஸ்டர் டோஸ் இதுவரையில் 39 வீதமானவர்களே பெற்றுக்கொண்டுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை 70 வீதம் வரையில் அதிகரித்தால் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.