பிரித்தானியாவில் கோவிட் - 19 பரவலில் ஏற்பட்டுள்ள மாற்றம்! வெளியாகியுள்ள புதிய தரவுகள்
பிரித்தானியாவின் சில பகுதிகளில் கோவிட் - 19 நோய் தொற்று குறைந்து வருவதாக தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகத்தின் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதன்படி, மார்ச் 6ம் திகதி வரையிலான புள்ளிவிபரங்களுக்கு அமைய இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் புதிய வழக்குகள் தொடர்ந்து குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், வடக்கு அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் அவ்வாறு நோய் தொற்று குறையவில்லை எனவும் தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் சமீபத்திய ஆர் எண் (0.6 - 0.8) நோய் தொற்று குறைந்து வருவதாகக் காட்டுகின்றது. அதாவது, சராசரியாக, இங்கிலாந்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு 10 பேருக்கும் 6 முதல் 8 பேர் வரை தொற்று பரவும்.
இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் பிரித்தானியாவில் 6,609 பேருக்கு கோவிட் - 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 175 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 23 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கோவிட் - 19 வைரஸ் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுள்ளனர்.
இதனிடையே, சமூகத்தில் சுமார் 231,400 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர், அல்லது இங்கிலாந்தில் ஒவ்வொரு 280 பேரில் ஒருவர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் கூறியுள்ளது.
இது கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் 230 பேரில் ஒருவருக்கு என்ற அடிப்படையில் காணப்பட்டது.
எவ்வாறாயினும், பிரித்தானியாவில் பாடசாலைகள் மீளவும் திறக்கப்பட்டுள்ளமை, நோய் பரவல் குறைந்து செல்லும் போக்கில் எவ்வாறான விளைவை ஏற்படுத்தும் என்பதை விரைவில் காணலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அறிகுறிகள் இருக்கின்றனவா? இல்லையா? என்பதை மக்களிடமிருந்து வரும் சோதனைகளின் அடிப்படையில் தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலக முடிவுகள் காண்பிக்கின்றன.
இங்கிலாந்தில், 270 பேரில் ஒருவருக்கு கோவிட் - 19 வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒரு வாரத்திற்கு முன்பு 220 பேரில் ஒருவருக்கு என்ற ரீதியில் காணப்பட்டுள்ளது.
வடக்கு அயர்லாந்தில் 310 பேரில் ஒருவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முன்னதாக 325 பேரில் ஒருவருக்கு என்ற ரீதியில் காணப்பட்டது.
வேல்ஸில் 365 பேரில் ஒருவர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இந்த எண்ணிக்கை 285 பேரில் ஒருவருக்கு என்ற ரீதியில் காணப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தில் 320 பேரில் ஒருவர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இந்த எண்ணிக்கை 335 பேரில் ஒருவருக்கு என்ற ரீதியில் காணப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் நோய் பரவல் அதிகரிப்பு ஏற்படக்கூடிய "ஆரம்ப அறிகுறிகள்" இருப்பதாக தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.
வட கிழக்கு, வட மேற்கு, கிழக்கு மிட்லாண்ட்ஸ், கிழக்கு இங்கிலாந்து மற்றும் லண்டனில் நோய் பரவும் விகிதங்கள் குறைந்துவிட்டன, மேலும் இந்த போக்கு யார்க்ஷயர் மற்றும் தி ஹம்பர் மற்றும் வெஸ்ட் மிட்லாண்ட்ஸில் நிச்சயமற்ற தன்மையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.