பிரித்தானியாவில் கோவிட் - 19 வைரஸ் பரவும் வீதத்தில் வீழ்ச்சி! வெளியாகியுள்ள அறிவிப்பு
பிரித்தானியாவில் கோவிட் - 19 வைரஸ் தொற்று பரவும் வீதம் தொடர்ந்தும் குறைந்து வருவதாக தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி 12 வரையிலான ஏழு நாட்களுக்கு, அண்மைய வாரங்களை விட குறைவான மக்கள் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
எவ்வாறாயினும், நோய்த்தொற்றின் அளவு அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள.
பிரித்தானியாவில் இன்றைய தினம் கோவிட் - 19 தொற்றினால் மேலும் 533 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 12,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பிரித்தானியாவில் கோவிட் -19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 119,920 ஆக உயர்ந்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,095,269 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 16.8 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு கோவிட் - 19 தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதுடன், 589,591 பேருக்கு இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய ஆர் எண், 0.6 முதல் 0.9 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் தொற்று எண்கள் குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இங்கிலாந்தில் 115 பேரில் ஒருவருக்கு வைரஸ் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த எண்ணிக்கை முந்தைய வாரத்தில் 80 பேரில் ஒருவருக்கு என்ற அடிப்படையில் காணப்பட்டது.
வடக்கு அயர்லாந்தில் 105 பேரில் ஒருவருக்கும் ( முன்னர் 75 பேரில் ஒருவருக்கு), வேல்ஸில் 125 பேரில் ஒருவருக்கும் (முன்னர் 85 பேரில் ஒருவருக்கு), ஸ்காட்லாந்தில் 180 பேரில் ஒருவருக்கும் ( முன்னர் 150 பேரில் ஒருவருக்கு) என்ற அடிப்படையில் வைரஸ் தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில், நோய்த்தொற்று விகிதத்தில் சில பிராந்திய மாறுபாடுகள் உள்ளன, இருப்பினும் இது அனைத்து பகுதிகளிலும் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.