ஆயுத யுத்தம், அரசியல் யுத்தம் பார்த்த எங்களுக்கு அதிகாரிகள் கோவிட் - 19 யுத்தம் காட்டுகின்றனர்!
வர்த்தக நிலையங்களிற்கு மூடுவிழா. ஆனால் திருமண மண்டபங்களில் அனைத்தும் வழமை போன்று இயங்குகின்றன. வர்த்தக நிலையங்களிலும் கூட சாதாரண வர்த்தகர்கள் மட்டுமே இலக்கு வைக்கப்படுகின்றார்கள். - இப்படி வர்த்தகர்கள் எழுப்பும் அவர்களின் நியாயமான ஆதங்கங்களிற்கு பதிலளிக்க முடியாமலேயே உள்ளது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் கோவிட் - 19 தொற்றாளர் எண்ணிக்கை இந்த ஆண்டு மட்டும் ஐந்நூறைத் தொட்டுவிட்டது. 5 பேருக்கு கோவிட் - 19 வந்தபோது ஊரடங்குச் சட்டம். ஆனால் ஐந்நூறு பேருக்கு வந்த பின்பும் ஒரு பகுதி வர்த்தக நிலையங்களிற்கு மட்டுமே மூடுவிழா. ஏனையவை தொடர்பிலும் ஒப்புக்கு பிரஸ்தாபிக்கப்பட்டது.
ஆனால் அவை எவையையும் சபை ஏற்கவில்லை. அதாவது திருமண மண்டபங்களிற்கு தடை, தனியார் வகுப்புக்கள் தடை, மரணச் சடங்குகளிற்கு 25 பேர் மட்டும் அனுமதி, பஸ்களில் இருக்கைகளிற்கு மட்டுமே பயணிகள் என விதம்விதமான கண்கவர் அறிவித்தல்கள் மட்டும் விடப்படுகின்றன.
ஆனால், இவை எவையுமே நடை முறையில் இல்லை என்பதும் கண்கூடாகவே உள்ளது.
இவ்வாறு அரச அதிபர், மாகாண சுகாதாரப் பணிப்பாளர்கள் விடும் அறிவித்தலை கடைப் பிடிக்காது கோவிட் - 19 பரவலைக் கட்டுப்படுத்த வழி ஏற்படுத்த முடியாது அல்லவா என வர்த்தகர்களிடம் வினாவினால், மறுபுறத்தில் வர்த்தகர்களினால் எழுப்பப்படும் நியாயமான ஐயங்கள் அல்லது கருத்துக்களிற்கு பதில் அளிப்பது யார் என்ற கேள்வி எழுகின்றது.
தனியார் துறையை மூடும் அதிகாரிகள் அரச துறை என்றதும் மெளனமாகின்றனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இந்த கோவிட் - 19 வந்த 500 பேரில் எத்தனை வர்த்தகர்கள் இருந்தனரோ அதேபோன்று பல மாணவர்களிற்கும் கோவிட் - 19 தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்காக அனைத்து பாடசாலைகளும் மூட வேண்டாம், குறைந்தது அந்தந்த மாணவர்கள் தொடர்புபட்ட பாடசாலையையேனும் மூட அதிகாரமற்றவர்களாகவே அதிகாரிகள் உள்ளனர்.
ஒரு வர்த்தக நிலையத்தில் கோவிட் - 19 இனங்காணப்பட்டால் அந்த வர்த்தக நிலையத்தை மட்டும் இழுத்து மூடலாம். மாறாக மாவட்டத்தின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் வர்த்தக நிலையங்கள் இலக்கு வைக்கப்படுவதேன்? வர்த்தக நிலையத்தின் மூலம் கோவிட் - 19 பரவும் என ஏ.சி. அறையில் இருந்து கண்டுபிடிக்கும் அதிகாரிகள், யாழ். நகருக்குள் வந்து பஸ்களைப் பார்வையிடலாம் அல்லவா? பஸ்களில் ஆசனத்தின் எண்ணிக்கை அளவிலேயே பயணிகளை ஏற்ற வேண்டும் என்றனர்.
மாறாக நிற்பதற்கே இடமின்றியே பஸ்கள் பயணிக்கின்றன. திருமண மண்டபங்கள் உடன் மூடப்படும என அறிவித்தனர். அவை இன்றும் இயங்குகின்றன. தனியார் கல்வி நிலையங்களில் கோவிட் - 19 பரவும், ஆனால், அரச பாடசாலையில் கோவிட் - 19 தொற்று வராது என்ற முடிவு வேறு. இந்தக் கண்டுபிடிப்பை அமெரிக்க விஞ்ஞானிகளால் கூட மேற்கொள்ள முடியுமோ தெரியாது.
மரண வீட்டில் 25 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு உள்ளது. அதிகாரிகள் வீட்டு நிகழ்வு எனில் உடல்கள் எத்தனை நாளும் வைத்திருக்கலாம். எவருமே கண்டு கொள்ளமாட்டார்கள். PauseUnmute Loaded: 55.54% Fullscreen VDO.AI இவை அனைத்திற்கும் மேலாக மாவட்டச் செயலகத்தில் மாதம் இரு கூட்டமாவது இடம்பெறும். 300இற்கும் மேற்பட்டோர் பங்கு கொள்வார்கள். அங்கே கோவிட் - 19 உட்புகுவதற்கு தடை செய்யப்பட்ட பிரதேசம் பாதுகாப்பாக உள்ளதோ என எண்ணத் தோன்றுகின்றது.
ஆக அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளிற்கும், தனவந்தர்களுக்கும் கோவிட் - 19 சட்டம் ஒன்றும் செய்யாது. ஏழை, எளியவர்கள், தினக் கூலிக்கு செல்பவர்களிற்கு மட்டும்தான் சகல கட்டுப்பாடுகளுமா?
இன்று நகரின் மத்தியில் ஐந்நூறிற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் முழுமையாக இழுத்து மூடப்பட்டுள்ளன. இதனை நம்பி வாழ்ந்த 3 ஆயிரம் குடும்பங்கள் தொடர்பில் வர்த்தக நிலையங்களை மூடுமாறு உத்தரவிட்டவர்கள் இதுவரை வாய் திறக்கவில்லை.
கடைகளைப்பூட்டிய அதிகாரிகள், ஊழியர்களின் வீடுகள் தொடர்பில் கரிசனை கொள்ளாதது ஏன்? வீடுகளைத் தனிமைப்படுத்தினால் அரச கொடுப்பனவு வழங்க வேண்டும் எனக் கருதும் அதிகாரிகள் வர்த்தக நிலையங்களை மூடுகின்றனரோ, அது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார்கள் என்று பாதிக்கப்பட்டோர் தரப்பில் கேள்வி எழுப்பப்படுகின்றது.
இதேநேரம் எத்தனை அரச திணைக்களங்களில் பணியாற்றுபவர்களிற்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டு விட்டது.
எத்தனை அரச திணைக்களங்களை மூடியுள்ளனர்? இது வேண்டும் என்றே தனியார் துறையை ஆயுத யுத்தம், அரசியல் யுத்தம் பார்த்த எங்களுக்கு அதிகாரிகள் கோவிட் - 19 யுத்தம் காட்டுகின்றனர்! நசுக்க முயலும் நடவடிக்கையாகவே கருதுகின்றோம் என ஊழியர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இவ்வளவு வர்த்தகத்தையும் முடக்கிய மாவட்ட நிர்வாகம் வர்த்தக வங்கிகளிற்கு கடிதம் அனுப்புகின்றனர். ஆனால் வங்கிகள் இதற்கான நடவடிக்கையை எவ்வளவு தூரம் ஏற்பார்கள் என்பது அடுத்த மாதமே தெரிய வரும்.
அப்போது பாதிப்பு ஏற்பட்டால் இந்த வர்த்தகர்களை அதிகாரிகள் எவருமே திரும்பியும் பார்க்க மாட்டார்கள். இந்த நாட்டிலே நாம் ஆயுத யுத்தம், அரசியல் யுத்தம் இரண்டையும் தாண்டியே பயணித்தோம். இருப்பினும் தற்போது திட்டமிட்டு நகர்த்தப்படும் கோவிட் - 19 யுத்தத்தில் அகப்பட்டுள்ளோம். இதனையும் எதிர்கொள்வோம். - என்றார் பிரபல வர்த்தகர் ஒருவர்.
ஏதும் அறியா நடமாடும் வியாபாரி ஒருவர் தெரிவிக்கையில் - வின்சர் சந்தியில் ஒருவர் நிற்பாரானால் இடதுகால் பக்கம் கோவிட் - 19 தொற்றாம். வலது கால் பக்கம் கோவிட் - 19 இல்லையாம். (கஸ்தூரியார் வீதி -ஸ்டான்லி றோட்) இதையும் இந்த படித்த அதிகாரிகள் கூறுகின்றனர். எமக்குத் தெரியாது.
அதே நேரம் சந்தையில் கோவிட் - 19 என சந்தையைப் பூட்டிவிட்டு அதே சந்தை வியாபாரி வீதியில் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகின்ற சுகாதார முறைமை எமக்குப் புரியவில்லை - என தினமும் கடைக்கு கடை நடமாடும் சிறு உற்பத்தியை விற்பனை செய்பவர் கூறினார்.
தற்போது ஏனைய மாவட்டத்தில் கோவிட் - 19 எண்ணிக்கை குறைவடைந்து யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பதாகக் கூறுகின்றனர்.
ஆனால் உண்மை என்னவெனில் நாள் ஒன்றிற்கு 20 ஆயிரம் வரையில் இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனை தற்போது 6 ஆயிரம், 7 ஆயிரம் பரிசோதனைகள் என்ற அடிப்படையில் இடம்பெறுமானால் எண்ணிக்கை குறைவாகக் காட்டக்கூடும். யாழில் தற்போது இரு இடங்களில் பரிசோதனை இடம்பெறுவதனால் அதிக பரிசோதனைகள் இடம்பெறக் கூடும் என்கின்றனர்.
இவை தொடர்பில் அதிகாரிகளை தொடர்பு கொண்டால், "ஏறச் சொன்னால் எருதிற்குக் கோபம், இறங்கச் சொன்னால் முடவனிற்குக் கோபம்
' என்கின்ற நிலைமையின் மத்தியிலேயே நாம் பணியாற்ற வேண்டும், இதனால் நடைமுறையில் பாதிக்கப்படுபவர்கள் நாம் தான்' எனத் தங்கள் பக்க ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர் அவர்கள்.
உணவகங்கள், பழக் கடைகள் போன்றவை தினசரி விற்பனைக்காகவும் உணவு தயாரித்தலிற்காகவும் கொள்வனவு செய்த பெரும் தொகை மரக்கறி வகைகள், பழங்களின் அழிவுகள்,சேதாரங்களை எவ்வாறு ஈடு செய்வது எனத் தெரியாமல் அவற்றின் உரிமையாளர்கள் திணறுகின்றனர்.
இதேநேரம் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களின் பிரபல வர்த்தக மையங்கள், தொழில் நிறுவனங்கள் அமைந்த இடங்கள் அனைத்தும் தடை செய்யப்படாமல் நாசூக்காகத் தவிர்க்கப்பட்டமை மேலும் சந்தேகத்தை வலுப்படுத்துகின்றது என்கின்றனர் வர்த்தகர்கள்.
இவற்றின் மத்தியில் தடை செய்யப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கண்டும் காணாமலும் அனுமதிக்கப்பட்டுள்ளமையால் இந்த இரு தினங்களும் கொரோனாவிற்கும் விடுமுறையா அல்லது அந்த இருநாளும பரவாது என்ற கண்டுபிடிப்பா என்ற ஏளனக் கேள்வியும் உள்ளது.