பிரித்தானியாவில் கோவிட் - 19 பரவும் அளவில் ஏற்பட்ட மாற்றம்! வெளியாகியுள்ள தகவல்
பிரித்தானியாவில் கோவிட் - 19 தொற்று பரவும் அளவு குறைந்து வருவதாக அந்நாட்டின் தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகத்தின் தரவுகள் காட்டுகின்றன.
இதன்படி, நோய் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதில் கோவிட் - 19 முடக்கம் செயல்படுகிறது என்பதற்கான கூடுதல் சான்றுகளை இந்த தரவுகள் காட்டுவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
சமீபத்திய ஆர் எண், 0.7 முதல் 0.9 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, அத்துடன், ஜூலைக்குப் பிறகு ஆர் எண் மிகவும் குறைவாக இருப்பது இதுவே முதல் முறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நோய் தொற்று அளவு அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பிரித்தானியாவில் மேலும் 15,144 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 758 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக அரசாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
முடக்கம் எப்போது தளர்த்தப்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானிகள் குறைவான நோயாளர்கள் பதிவாகுவது, சிறந்தது என்று தெரிவித்துள்ளனர்.
பெப்ரவரி 22ம் திகதி முதல் கட்டுப்பாடுகளையும் தளர்த்துவதற்கான திட்டங்களை கோடிட்டுக் காட்டுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இதன்படி, பாடசாலைகளை மீள திறப்பது உடனடி முன்னுரிமையாக இருக்கும் என்று அரசு கூறுகிறது.
இது குறித்து பிரதமரின் உத்தியோகபூர்வ செய்தித் தொடர்பாளர் கருத்து வெளியிடுகையில், இலையுதிர் காலம் வரை சமூக விலகல் பராமரிக்கப்படுவதாகும், "சமீபத்திய தரவுகளும் சான்றுகளும் NHS மீதான அழுத்தத்துடன் இன்னும் கடினமான சூழ்நிலையில் நாங்கள் இருக்கிறோம் என்பதை தெளிவாகக் காட்டுகிறது.
இதேவேளை, தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பிரித்தானியாவில் இன்னும் பாதுகாக்கப்படாத ஏராளமான மக்கள் உள்ளனர், மேலும் அவர்கள் தொற்றுக்கு ஆளானால் கோவிட் -19 உடன் கடுமையான நோய்வாய்ப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பிரித்தானியாவில் 14 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் குறைந்தது ஒரு கோவிட் -19 வைரஸ் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுள்ளனர்.
பெப்ரவரி 15 திங்கட்கிழமைக்குள் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள், சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் பணியாளர்கள் மற்றும் மிகவும் மருத்துவ ரீதியாக பாதிக்கப்படக்கூடியவர்கள், என முன்னுரிமை குழுக்களில் சுமார் 15 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.