முட்டை விலையில் மாற்றம்!
முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான வழக்கு நேற்று(15.12.2022) மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது நுகர்வோர் சேவை சபை கூட்டம் நேற்று இடம்பெற்ற போது, வெள்ளை முட்டை 42 ரூபா மற்றும் சிவப்பு முட்டை 44 ரூபா என்ற கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்டதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை சார்பாக நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை
இதேவேளை இந்த விலைகளுக்கு தமது கட்சிக்காரர்கள் இணங்கப்போவதில்லை என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி குவேர டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட விலையை விட, குறைந்த விலையே தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
இதனையடுத்து, இது தொடர்பான வழக்கை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
வர்த்தகர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
இந்நிலையில் முட்டையை 55 ரூபாவை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டாம் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் வர்த்தகர்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
உற்பத்தி செலவிற்கமைய வெள்ளை முட்டை 49 ரூபா மற்றும் சிவப்பு முட்டை 50 ரூபா என்ற விலை எல்லையை வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது, தற்காலிகமாக 55 ரூபா என்ற விலை எல்லையை முட்டைக்கு வழங்குமாறு கோரியுள்ளனர்.
மேலும் உற்பத்தி கிடைக்கும் போது, எதிர்காலத்தில் இந்த விலை குறைவடையும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்க பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்துள்ளார்.