ஆர்ப்பாட்டகார்களுக்கு எதிராக உத்தரவிட மறுத்த நீதிமன்றம்
கொழும்பு கொள்ளுப்பிட்டி அலரி மாளிகைக்கு எதிரில் சிலர், மக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால், அதனை நிறுத்துமாறு எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என பொலிஸார் விடுத்த கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் ஹர்சன கெக்குணவெல இன்று நிராகரித்துள்ளார்.
எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள், பொது மக்களுக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் நடந்துக்கொண்டால், அது சம்பந்தமாக பொலிஸ் அதிகாரங்களை பயன்படுத்தி அதனை தடுக்குமாறு கூறிய நீதவான், பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நபர்கள் யார் என்பதை குறிப்பிடாமல், விடுக்கும் கோரிக்கைக்கு தன்னால் உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது எனவும் அவர்கள் சீர்குலைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டால், பொலிஸ் அதிகாரத்தை பயன்படுத்துமாறும் நீதிவான் கூறியுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத் திடலில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, சிலர், கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ வசஸ்தலமான அலரி மாளிகைக்கு எதிரில் எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக நடைபாதைகளை பய்னபடுத்தும் மக்களுக்கு பெரும் சிரமங்களும், தொந்தரவும் ஏற்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.



