ஆண்டியர் சந்தியில் சுற்றுச்சந்தி கட்டுமானத்தை நிறுத்துமாறு மன்று கட்டளை
சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஆண்டியர் சந்தியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுச் சந்தி கட்டுமானத்திற்கு எதிராக சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.மாஹிரால் தொடரப்பட்ட வழக்கு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றின் முன்னிலையில் விசாரணைக்காக அழைக்கப்பட்டது.
நகர அபிவிருத்தி அதிகார சபைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் படி "அபிவிருத்திப் பிரதேசமாக" வர்த்தமானியின் மூலம் பிரகடனம் செய்யப்பட்ட பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் யாவும், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் அதிகாரம் கையளிக்கப்பட்ட குறித்த பிரதேசம் அமையப் பெற்றுள்ள உள்ளூராட்சி அதிகார சபையின் அனுமதியுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.
தொடரப்பட்ட வழக்கு
இந்நிலையில், மேற்படி சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஆண்டியர் சந்தியில் சம்மாந்துறை பிரதேச சபையின் அனுமதியைப் பெறாமல் பல்வேறு தொழிநுட்பக் குறைபாடுகளோடு வீதி அபிவிருத்தி அதிகார சபையானது சட்டமுரணாக மேற்கொண்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனவே, அபிவிருத்தி நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரித் தொடரப்பட்டுள்ள வழக்கில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், நிறைவேற்றுப் பொறியியலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்த பிரதிவாதிகள் இவ்வழக்கை முன்கொண்டு செல்வது தொடர்பில் தமது ஆட்சேபனைகளைத் தெரிவித்தனர்.
மேற்படி ஆட்சேபனைகளை நிராகரித்த மன்றானது மனுதாரரான சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல். மாஹிர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம்மினால் மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்துக்கு அமைவாக இவ்வழக்கின் பிரதிவாதிகளான வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் குறித்த பிரதேசத்தில் எவ்வித அபிவிருத்தி வேலைகளிலும் ஈடுபடாமல் தற்போதுள்ள நிலமையை (Status Quo) தொடர்ந்தும் பேணுமாறு கட்டளையாக்கியுள்ளது.
இவ்வழக்கானது மீண்டும் எதிர்வரும் 03.02.2026 திகதியில் பிரதிவாதிகள் சார்பான காரணங்காட்டும் விசாரணைகளுக்காக (Show cause inquiry) திகதியிடப்பட்டுள்ளது.
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam