மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனுக்கு விளக்கமறியல்
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சந்தேகநபரை எதிர்வரும் 22 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகிழடித்தீவு - காளிகோவில் வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தயாரான 20 வயதுடைய சிவலிங்கம் கஜேந்தினி என்பவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக கடந்த புதன்கிழமை (15) தனது 20 வயதுடைய மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு 30 வயதான கணவன் தனது 2 அரை வயது குழந்தையை தூக்கி கொண்டு தனது சகோதரியின் வீட்டிற்கு கொண்டு சென்று குழந்தையை ஒப்படைத்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் சரணடைந்த நிலையில், பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் நீதிமன்ற உத்தரவுக்கமைய பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன்போது மேற்கொண்ட பிரேத பரிசோதனையில் கழுத்து நெரித்ததன் காரணமாகவே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக சட்டவைத்திய அதிகாரி அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேகநபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்திய போதே அவரை எதிர்வரும் 22 ம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.



