சேமலாப நிதியில் முறைகேடு: பிரபல பாடசாலை அதிபருக்கு நீதிமன்றத்தினால் அழைப்பாணை
கொழும்பு றோயல் கல்லூரியின் தற்காலிக ஊழியர்களின் சேமலாப நிதியில் ஏற்பட்ட முறைகேடு காரணமாக அக்கல்லூரியின் அதிபருக்கு நீதிமன்றம் அழைப்பாணை ஒன்றை பிறப்பித்துள்ளது.
இதற்கமைய இன்று (13.07.2023) வியாழக்கிழமை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
றோயல் கல்லூரியின் தற்காலிக ஊழியர்களுக்கு மூன்று இலட்சம் ரூபாவுக்கும் கூடுதலான சேமலாப நிதிக்கான வைப்புகளை செலுத்தாத குற்றச்சாட்டு தொடர்பில் தொழில் திணைக்களத்தினால் கொழும்பு றோயல் கல்லூரிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்ற அழைப்பாணை
தொழிலாளர் திணைக்களத்தினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் ஐந்தாம் இலக்க நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள இந்த வழக்கு தொடர்பில் கொழும்பு றோயல் கல்லூரியின் அதிபர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
ஊழியர்களின் சேமலாப வைப்பு நிதியாக மூன்று இலட்சத்து நாற்பத்தி ஓராயிரத்து நூற்று இருபத்தி இரண்டு ரூபா பணம் செலுத்தத் தவறியுள்ளதால், தொழில் திணைக்களம் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |