யாழ். யூடியூபர் கிருஷ்ணா தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ். யூடியூபர் கிருஷ்ணாவுக்கான பிணைமனுகோரலுக்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நகர்த்தல் பத்திரம் மூலம் யூடியூப்பர் கிருஷ்ணாவின் வழக்கு இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் பிணைக்கு அனுமதி கோரி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
எனினும் இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் வழக்கை எதிர்வரும் 19ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
வழக்கு தொடர்பில் எமது ஊடகம் இளவாளை பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொண்டபோது மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டது.
யூடியூபர் கிருஷ்ணா
யாழில் வீடொன்றுக்குள் வைத்து பெண் பிள்ளையொன்றை தகாத முறையில் பேசிய யூடியூபர் கிருஷ்ணா பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
பண்டத்தரிப்பு பகுதியில் வைத்து ஊர் மக்களால் அவர் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
உதவி செய்கின்ற காணொளிகளை பதிவேற்றம் செய்யும் வகையிலான யூடியுப் தளம் ஒன்றினை நடாத்தி வருகின்ற கிருஷ்ணா என்ற குறித்த நபர் பெண் பிள்ளைகளை அவமானப்படுத்துவது போன்று பேசிய காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.
இந்நிலையில், இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டது. அந்த வகையில் பல்வேறு தரப்பினரும் குறித்த நபருக்கு எதிராக கருத்தினை முன்வைத்து வந்தனர்.
14 நாட்களுக்கு விளக்கமறியல்
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட யூடியூபர் கிருஷ்ணா உள்ளிட்ட நால்வரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனினும் நகர்த்தல் பத்திரம் மூலம் பிணை மனு கோரி இன்று மல்லாகம் நீதிமன்றில் வழக்கு இடம்பெற்றது.
இந்நிலையில், வழக்கானது எதிர்வரும் 19ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
