12 ஆண்டுகளை சிறையில் தொலைத்த முன்னாள் அரச புலனாய்வாளர் உயர்நீதிமன்றில்
பயங்கரவாதத் தடைப்பிரிவினரால் கைது செய்யப்பட்டு 12 ஆண்டுகளின் பின்னர் விடுதலையான முன்னாள் அரச புலனாய்வாளர் ஒருவர் தண்டனை காலத்தில் தனக்கு இழைக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல்களுக்கு நீதிக்கோரி உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் பொலிஸ் உளவுச் சேவை உத்தியோகத்தரான கண்டி - கடுகன்னாவையை பிறப்பிடமாகக் கொண்ட ரங்கவடி தர்மதாச என்பவரே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
2007ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு புலனாய்வுத் தகவல்களை வழங்கியதாகவும், 23 கிராம் ஆர்.டி.எஸ் வெடிமருந்தும், 35 துப்பாக்கி ரவைகளையும்,8 சையினட் வில்லைகளையும் உடமையில் வைத்திருந்ததாகவும், குற்றம் சுமத்தப்பட்டு பயங்கரவாத தடைப் பொலிஸ் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டு 12 வருடங்கள் வழக்கு விசாரணையின் பின்னர் நிரபராதியென கொழும்பு மேல் நீதி மன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தான் பயங்கரவாதத் தடைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமையால் உரிய சிகிச்சைகள் இன்றி தனது ஆரோக்கியம் பறிக்கப்பட்டுவிட்டதாகவும், சிறையில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டதனால் தற்பொழுது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து இரத்த சுத்திகரிப்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதனால் நியாயமான நிவாரணத்தை தனக்கு பெற்றுத்தருமாறு கோரி உயர் நீதிமன்றினை நாடியுள்ளார்.
உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு
இந்த மனுவில் பொலிஸ் மா அதிபர், களனி சிரேஷ்ட பொலிசஸ் அத்தியட்சர் ரொஷான் டயஸ், சிறைச்சாலை பொறுப்பதிகாரி, சிறைச்சாலை அத்தியட்சர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டே சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா ஊடாக அவர் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவினை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு அரசியலமைப்பின் 17 மற்றும் 126 ஆம் உறுப்புரைகளுக்கு அமைய இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
25,21,17 வயதுடைய மூன்று பெண் பிள்ளைகள் மற்றும் 13 வயதுடைய ஒரு ஆண் பிள்ளையின் தந்தையான குறித்த மனுதாரர், 1990 ஆம் ஆண்டு மே முதலாம் திகதி பொலிஸ் திணைக்களத்தில் காண்ஸ்டபிளாக சேர்ந்திருந்தார். அப்போது முதல் சுமார் 15 வருடங்களுக்கும் மேற்பட்ட சேவைக் காலத்தை உடைய மனுதாரர், அவசர கால சட்ட விதிகளின் கீழ் கடந்த 2007 செப்டம்பர் 21 ஆம் திகதி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
அது முதல் 2008 செப்டம்பர் 12 ஆம் திகதி தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டிருந்த அவர், 2008 செப்டம்பர் 12 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு அன்று முதல் கடந்த 2019 மே 8 ஆம் திகதிவரை அவர் விளக்கமறியலில் இருந்து வந்துள்ளார்.
நீதிமன்றால் விடுதலை
கடந்த 2010 ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி மனுதாரருக்கு எதிராக சட்ட மா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றில் 5176-2010 எனும் இலக்கத்தின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில் ,வழக்கு விசாரணைகள் இடம்பெறும் போதும் மனுதாரர் விளக்கமறியலிலேயே இருந்து வந்துள்ளார்.
இவ்வாறான நிலையிலேயே, மனுதாரரை கொழும்பு மேல் நீதிமன்றம் 2019 மே 8 ஆம் திகதி குற்றமற்றவர் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தை அடுத்து குற்றமற்றவர் என மேல் நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட போதும், அவர் மீள சேவையில் இணைத்துக்கொள்ளப்படவோ அல்லது அவருக்கான நட்ட ஈடுகள் எவையுமோ வழங்கப்படவில்லை.
முறையான சிகிச்சைகள் வழங்கப்படவில்லை
இந்நிலையில் நீண்ட நாட்கள் சிறையிலேயே இருந்த ( 12 வருடங்கள் வரை) மனுதாரர் சிறு நீரக பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்துள்ளார். அதனால் அவரின் முழு வாழ்வும் இருண்டுள்ளது. மனுதாரரின் தகவல்கள் பிரகாரம், அவர் விளக்கமறியலில் இருந்த காலத்தில், அங்கு அவருக்கு முறையான சிகிச்சைகள் மற்றும் போதுமான மருத்துவ கவணிப்புக்கள் வழங்கப்படாமையே தற்போதைய சிறுநீரக பாதிப்புக்கு முக்கிய காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொழும்பு விளக்கமறியலில் இருந்த காலத்திலும், பூசா முகாமில் இருந்த காலப்பகுதியிலும், குடிப்பதற்கு குடி நீர் கூட சரியாக கிடைக்கவில்லை என கூறும் மனுதாரர், தனக்கு சுகயீனம் ஏற்படும் போதெல்லாம் கூட எந்தவிதமான சரியான மருத்துவ உதவிகளும் வழங்கப்படவில்லை என மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறையில் இருக்கும் போது தனக்கு முதுகுவலி அடிக்கடி ஏற்படுவதாகவும், அவ்வாறு வலி ஏற்படும் போது அது குறித்து கூறும் சந்தர்ப்பங்களில் கூட சிறை அதிகாரிகள் அதனை கணக்கில் கொள்ளவில்லை என அவர் கூறுகின்றார். அத்துடன் சிறை அறைகளில் அடுக்கப்ப்ட்ட கைதிகளின் எண்ணிக்கை, சுகாதாரமற்ற கழிப்பறை வசதிகள் போன்றவற்றையும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தகவல் அறியும் சட்ட மூலம்
விளக்கமறியலில் இருந்த போது, மனுதாரர் அடிக்கடி சுகயீனம் அடைந்துள்ளதுடன், ஒரு சமயம் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் சிகிச்சைப் பெற்றுள்ளார். எனினும் எதற்காக சிகிச்சைப் பெற்றார் என்பது குறித்த எந்த மருத்துவ சான்றிதழ்களும் தற்சமயம் மனுதாரரிடம் இல்லை.
தான் சிறையில் இருந்த காலத்தில் தனக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் தொடர்பிலான அறிக்கைகளை மனுதாரர் தகவல் அறியும் சட்ட மூலம் ஊடாக சிறைச்சாலையைக் கோரியுள்ள போதும் இதுவரை அளிக்கப்படவில்லை.
மாமியாரின் ஓய்வூதிய பணமே வாழ்வாதாரம்
தனது வாழ்வாதார தொழிலை இழந்த நிலையில் தற்போதுவரை வாழும் மனுதாரர், குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், அது முதல் தொடர்ந்தும் ஆரோக்கியமற்ற நிலையிலேயே வாழ்கிறார்.
சிறையில் இருக்கும் போது மனுதாரரின் குடும்பத்தாரை அவரது மாமியாரின் ஓய்வூதிய பணத்தைக் கொண்டே வாழ வைத்ததாக கூறும் மனுதாரர், தற்போதும் மாமியாரின் ஓய்வூதிய பணத்திலேயே தங்கி இருக்க வேண்டியுள்ளதாக கூறுகின்றார். கடுமையான சிறுநீரக பாதிப்புக்கள் காரணமாக மிக்க துன்பங்களை அனுபவிப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது .
அநியாயமாக சிறை வைக்கப்பட்டதன் ஊடாக தொலைத்த தன் வாழ்க்கைக்கும், ஆரோக்கியத்துக்கும் நீதிக்கோரி ,தனது வாழ் நாட்கள் மிக குறியதெனவும் தனது மனைவி குழந்தைகளையும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 2 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
