ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கையால் எழுந்த சிக்கல்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
டிஜிட்டல் வெறுப்புணர்வு தடுப்பு மையத்தின் (Center for Countering Digital Hate) நிறுவுனரான இம்ரான் அஹமட்டை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தவும், அவரைத் தடுப்புக்காவலில் வைக்கவும் அமெரிக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
அமெரிக்காவில் 'கிரீன் கார்டு' (Green Card) எனப்படும் நிரந்தரக் குடியிருப்பு உரிமையுடன் வசித்து வரும் இம்ரான் உள்ளிட்ட ஐந்து ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களை, கருத்து சுதந்திரத்தை முடக்க முயற்சிப்பதாகக் கூறி ட்ரம்ப் நிர்வாகம் அண்மையில் 'கருப்புப் பட்டியலில்' சேர்த்தது.
இடைக்காலத் தடை
இதற்கு எதிராக இம்ரான் தொடர்ந்த வழக்கை விசாரித்த நியூயோர்க் மாவட்ட நீதிபதி வெர்னான் எஸ்.ப்ரோடெரிக் (Vernon S. Broderick), இந்தத் தடையுத்தரவை வழங்கினார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ, இம்ரான் அஹமட் மற்றும் அவரது அமைப்பு சமூக ஊடக நிறுவனங்களை அமெரிக்கக் கருத்துக்களைத் தணிக்கை செய்யத் தூண்டுவதாகக் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், தனது மனைவி மற்றும் குழந்தை அமெரிக்கக் குடிமக்கள் என்றும், தான் சட்டப்பூர்வமாக அங்கு வசித்து வருவதாகவும் இம்ரான் வாதிட்டார்.
தடுப்புக்காவல்
வெறும் அரசியல் காரணங்களுக்காக ஒரு நிரந்தரக் குடியுரிமை பெற்றவரைத் தடுப்புக்காவலில் வைத்து வெளியேற்ற முடியாது என்று அவரது சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.

இந்தத் தடையுத்தரவு ட்ரம்ப் நிர்வாகத்தின் விசா கொள்கைகளுக்கு ஏற்பட்ட ஆரம்பகட்ட சட்டப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. முன்னதாக, எலான் மஸ்க்கின் 'X' தளத்தில் வெறுப்புப் பேச்சுகள் அதிகரித்துள்ளதாக இம்ரான் அஹமட்டின் அமைப்பு வெளியிட்ட அறிக்கைக்காக, மஸ்க் அந்த அமைப்பின் மீது வழக்குத் தொடர்ந்திருந்தார். பின்னர் அந்த வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
தற்போது அமெரிக்க அரசின் விசா தடையால் இம்ரான் நாடு கடத்தப்படும் அபாயம் ஏற்பட்ட நிலையில், நீதிமன்றம் வழங்கியுள்ளதுடன் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை (29) நடைபெற உள்ளது.