மஹிந்தவை தொடர்ந்து நண்பர்களுக்கும் பிரச்சினை! கப்ராலுக்கு மற்றும் ஒரு வெளிநாட்டு பயணத்தடை!
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் மற்றுமொரு வெளிநாட்டு பயணத் தடையை பிறப்பித்துள்ளது.
கோட்டை நீதவான் திலின கமகேக்கு முன்னால் இன்று தாக்கல் செய்த தனிப்பட்ட முறைப்பாட்டினை கவனத்திற்கொண்டு இந்த உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கப்ரால் மத்திய வங்கி ஆளுநராக கடமையாற்றிய போது அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக தினியாவல பாலித தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தநிலையில் 2022 ஜூன் 07 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அஜித் நிவார்ட் கப்ராலுக்கு நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியுள்ளது.
2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய கப்ரால், அமைச்சரவையின் அனுமதியின்றி அமெரிக்க பிரஜை ஒருவருக்கு 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாக முறைப்பாட்டாளர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இதனையடுத்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை பரிசீலித்த நீதிமன்றம், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரை நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
ஏற்கனவே ஏப்ரல் 18ஆம் திகதியும், கொழும்பு மேலதிக நீதவான் .கப்ராலுக்கு பயணத்தடை ஒன்றை விதித்திருந்தார்.



